Last Updated : 18 Aug, 2021 06:42 PM

 

Published : 18 Aug 2021 06:42 PM
Last Updated : 18 Aug 2021 06:42 PM

சிபிஐக்கு தன்னாட்சி அந்தஸ்து, தனி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

சிபிஐ-க்குத் தன்னாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும், பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சஞ்சீவ்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''ராமநாதபுரத்தில் புல்லியன் பின்டெக் என்ற பெயரில் நீதிமணி, ஆனந்த் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடி அளவுக்கு மோசடி செய்தனர். இந்த மோசடி தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸார், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை. எனவே வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிட்டனர்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''மனுதாரர் குறிப்பிடும் நிதி நிறுவன மோசடி வழக்கை தற்போது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்'' என்றார்.

பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

''சிபிஐக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கி தன்னாட்சி அந்தஸ்து வழங்க விரைவில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தலைமை கணக்கு ஆணையம் போல் சிபிஐ சுதந்திரமான அமைப்பாகச் செயல்பட வேண்டும். பட்ஜெட்டில் சிபிஐக்குத் தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக இயங்க வேண்டும்.

அமைச்சரவை செயலாளரைப் போல தனித்த அதிகாரத்துடன் அமைச்சர் மற்றும் பிரதமரிடம் நேரடியாக அறிக்கையளி்க்கும் வகையில் சிபிஐ இயக்குநருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

அமெரிக்காவின் எஃப்பிஐ மற்றும் இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு போலீஸைப் போல நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் சிபிஐக்கு வழங்கப்பட வேண்டும். சைபர் மற்றும் தடயவியல் துறை, நிதி தணிக்கை ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்டவர்களை சிபிஐயில் சேர்ப்பது குறித்து 6 வாரத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

சிபிஐக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், கட்டுமானங்கள், குடியிருப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வசதியை 6 வாரத்திற்குள் ஏற்படுத்த வேண்டும்.

கடந்த 31.12.2020 வரை நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது சிபிஐ இயக்குநர் ஆஜராக வேண்டும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். சொத்துக்களை முடக்கம் செய்துள்ளனர். பலரைக் கைது செய்துள்ளனர். இதனால் சிபிஐ-க்கு மாற்ற வேண்டியதில்லை''.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x