

மதுரை மாநகராட்சியில் தினமும் அதிகாலையிலே தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்களுடன் சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து தரும்படி பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்து தூய்மைப்பணியாளர்கள் குப்பைகளை சேகரித்தனர்.
மதுரை மாநகராட்சியில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து, அவற்றை உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மாநகராட்சியில் 27 இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் இந்த மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு உரமாக்கி மலிவு விலையில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கரோனா ஊரடங்கால் கடந்த ஒன்றரை ஆண்டாக மக்கள், குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து கொடுப்பதில் சுனக்கம் ஏற்பட்டது. பொதுமக்கள் கடந்த காலத்தைபோல், குப்பைகளை கலந்து கொடுக்க ஆரம்பித்தனர்.
அதனால், தற்போது மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து பொதுமக்களிடம் சேகரிக்கும் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக, ஒவ்வொரு வார்டிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இதற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்வதற்காக தனியாக பரப்புரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், அதிகாலையிலே வார்டுகளில் தினமும் தூய்மைப்பணியாளர்களுடன் சென்று, பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்து மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து சேகரிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில், மக்கும், மக்காத குப்பைகள் என்றால் என்ன, எப்படி பிரித்து கொடுக்க வேண்டும் என்று பரப்புரையாளர்களும், தூய்மைப்பணியாளர்களும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்கின்றனர். நேற்று காலை 36வது வார்டு புளியந்தோப்பு, ஆழ்வாரம் புரம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டப் பரபரப்புரையாளர்கள், தூய்மைப்பணியாளர்களுக்கு பொதுமக்களிடம் குப்பைகளை சேகரிக்கும்போதே, மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்கும்படி விழிப்புணர்வு செய்து குப்பைகளை சேகரித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கேபி.கார்த்திகேயன் கூறுகையில், ‘‘குப்பைகளை கலந்து கொடுப்பதால் அவற்றை உரமாக்க முடியாது. மக்கும் குப்பைகளை உரமாக்கவதற்கே 45 நாட்கள் வரை ஆகும். மக்காத குப்பை கலந்துவிட்டதால் தூர்நாற்றம் மிகுதியாகி உரமாக்குவதில் சிக்கல் ஏற்படும். அதனாலே, அனைத்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களையும் முழுமையாக பயன்படுத்துவதற்காக குப்பைகளை தனித்தனியாக கொடுக்க இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, ’’ என்றார்.