தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு

தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு
Updated on
1 min read

மத்தியக் கல்வி அமைச்சகம் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான ஆசிரியர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 44 ஆசிரியர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து திருச்சி மாவட்டம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய இருவரும் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து ஓர் ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வழக்கமாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் டெல்லி விக்யான் பவனில் செப்டம்பர் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் விருது வழங்கப்படும். கடந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடியரசுத் தலைவர் சார்பில் காணொலிக் காட்சி மூலம் விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு இந்து தமிழின் அன்பாசிரியர்கள் திலிப் மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in