Published : 28 Feb 2016 05:32 PM
Last Updated : 28 Feb 2016 05:32 PM

பள்ளி மாணவிக்கு பச்சை குத்தியவர்களுக்கு சட்டப்படி தண்டனை அளிக்க வேண்டும்: ராமதாஸ்

பள்ளி மாணவிக்கு துடிக்க, துடிக்க பச்சை குத்திய அதிமுக நிர்வாகிகள், அதற்கு துணையாக இருந்த அமைச்சர்கள், ஊக்குவித்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் மீது தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி தண்டனை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்கு தொல்லை தரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக சென்னை வேளச்சேரியில் 668 பேருக்கு பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கட்டாயப்படுத்தியும், காசு கொடுத்தும் அழைத்து வரப்பட்டவர்களின் கைகளில் ஜெயலலிதாவின் படம் பச்சை குத்தப்பட்டது. அப்போது வாக்களிக்கும் வயதை எட்டாத பள்ளி மாணவி ஒருவருக்கு கட்டாயப்படுத்தி பச்சை குத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அம்மாணவி கதறி அழுகிறார்; துடிக்கிறார். ‘‘என்னால் வலி தாங்க முடியவில்லை. தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்’’ என்று கதறுகிறார்.

ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சில பெண்கள் அவரை பிடித்துக் கொள்ள அவருக்கு பச்சை குத்தி முடிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்தக் கொடுமையை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கின்றனர். இக்காட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வாட்ஸ்-அப்பில் வலம் வருகின்றன.

அமைச்சர்கள் எனப்படுபவர்கள் மக்கள் நலன் காப்பவர்களாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் அதைக் களைபவர்களாக இருக்க வேண்டும். அந்த இலக்கணத்தின்படி வலி தாங்க முடியாமல் கதறும் மாணவியை மீட்டு, அவருக்கு பச்சை குத்தியதால் ஏற்பட்ட காயத்துக்கு மருத்துவம் அளிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் மாணவியின் அலறலையும், கதறலையும் ரசித்துப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததை பார்க்கும் போது, அவர்களுக்கு மனிதநேயம் மரத்துப் போய் விட்டதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. மிகப்பெரிய மனித உரிமை மீறல் கண்ணுக்கு முன் நடந்த போது, அதை வேடிக்கைப் பார்த்த இவர்கள் அமைச்சர்களாக நீடிக்கும் தகுதியை இழந்து விட்டனர்.

பச்சை குத்திக் கொள்வது என்பது அழகியல் சார்ந்த கலையாகவும், அக்குபஞ்சர் மருத்துவமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், தனி மனிதர்களின் உருவத்தை கட்டாயப்படுத்தி பச்சை குத்தி விடுவது அடிமைகளின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

பள்ளிச் சிறுமிக்கு துடிக்க, துடிக்க பச்சை குத்திய அதிமுக நிர்வாகிகள், அதற்கு துணையாக இருந்த அமைச்சர்கள், ஊக்குவித்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் மீது தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி தண்டனை அளிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x