

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வகையில், நடப்பு கூட்டத் தொடரிலேயே சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான அரசின் சார்பில் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 13-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 14-ம் தேதி, சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அத்துறையின் நிதிநிலை அறிக்கையைத் தனியாகத் தாக்கல் செய்தார்
இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக பட்ஜெட் அறிவிப்பு மீதான விவாதம், கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் இன்று (ஆக. 18) மூன்றாவது நாளாக சட்டப்பேரவை கூடி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாகப் பேசும்போது, நீட் தேர்வுக்கு விலக்குப் பெறுவது குறித்துக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ''நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக இதுகுறித்துப் பரிசீலித்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வகையில், நடப்பு கூட்டத் தொடரிலேயே சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் 12-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.