Published : 18 Aug 2021 12:36 PM
Last Updated : 18 Aug 2021 12:36 PM

கோடநாடு வழக்கில் என்னையும் சேர்க்க சதி; குற்றவாளிகளுக்கும் திமுகவுக்கும் தொடர்பு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

கோடநாடு வழக்கில் தன்னையும் சேர்ப்பதற்கு சதி நடப்பதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இன்று (ஆக. 18) மூன்றாவது நாளாக பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்காக கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூடியது.

அதிமுகவினர் சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் மு.அப்பாவு அனுமதி அளித்ததும், "கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மறு விசாரணை செய்வது எதற்கு?" என, எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அதற்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்கையில், "இந்த விவகாரம் விசாரணையில் இருக்கிறது. 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல அதிமுகவினர் செயல்படுகின்றனர். இந்த வழக்கில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொண்டு வரப்படும். நீதிமன்ற அனுமதியுடன் தான் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது" என பேசினார்.

இதையடுத்து, அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் வெளிநடப்பு செய்த அதிமுகவினர், கலைவாணர் அரங்குக்க்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, ஈபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது கோடநாடு இல்லத்துக்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அவர் மறைவுக்குப் பிறகு அந்த வீட்டில் சில கொள்ளை கும்பல், சயான் மற்றும் அவரின் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அங்கிருந்த காவலாளி தடுத்தார். அப்போது, தாக்குதலுக்குட்பட்டு அவர் இறந்தார்.

இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. வழக்கு முடியும் தருவாயில் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக அரசு சயானுக்கு சம்மன் அனுப்பி, ரகசியமாக வரச்செய்து வாக்குமூலம் பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.

அந்த வாக்குமூலத்தில் என்னையும் முக்கிய நிர்வாகிகளையும் சேர்த்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்கெனவே அதிமுக அரசு விசாரணை நடத்தி, வழக்கு முடிய உள்ளது. முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, வரும் 27-ம் தேதி விசாரணைக்கு வரும் சூழலில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக தலைவர்கள் மீது வழக்குபோட்டு அச்சுறுத்தி, அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். ஒருபோதும் நடக்காது.

இந்த வழக்கு சரியான வழியில் செல்வதற்கான நடவடிக்கைகள் முந்தைய அதிமுக அரசில் எடுக்கப்பட்டது. இவர்களுக்கும் இந்த குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம்? அந்த குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் ஆஜராகியிருக்கிறார். ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகினர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என, செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் 3 முறை மாறுபட்ட நீதிபதிகள் உத்தரவு வழங்கினர். டிராஃபிக் ராமசாமி உயிருடன் இருந்தபோது, திமுகவின் தூண்டுதலின்பேரில் இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

ஆட்சிக்கு வந்ததும் திமுக வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கின்றனர். குற்றவாளிகளுக்கு யார் ஆதரவாக வாதாடினார்களோ, அவர்கள் அரசு வழக்கறிஞர்களாகின்றனர். சிஆர்பிசி 313, அதன்பேரில் சாட்சிகள் எல்லாம் விசாரிக்கப்பட்டவுடன் குற்றவாளியிடம் கேட்பார்கள். அப்போதும் சயான் எந்த கருத்தையும் சொல்லவில்லை. மறுவிசாரணை கோரவில்லை.

அரசு வழக்கறிஞர்கள் வேண்டுமென்றே மறு விசாரணை வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் எந்த அனுமதியும் அதற்கு கொடுக்கவில்லை. 2020-ல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பே வழங்கியுள்ளது. ஒரு வழக்கின் விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில், மறு விசாரணை வேண்டுமென்றால் நீதிமன்ற உத்தரவு பெற வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதையெல்லாம் மறைத்து திமுக அரசு முன்னாள் அமைச்சர்கள் மீதும் என் மீதும் வீண் பழி சுமத்தி அவதூறு பரப்புவதற்காக பொய் வழக்கை ஜோடித்துக் கொண்டிருக்கின்றனர். அதிமுக எதற்கும் அஞ்சியது இல்லை. எம்ஜிஆர் எவ்வளவோ எதிர்ப்புகளை எதிர்கொண்டு சாதித்தார். ஜெயலலிதாவும் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டார்.

அதே வழியில் பணிகளை தொடர்வோம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியிலே தொய்வின்றி பணியாற்றும் கட்சி அதிமுக என்பதை நிரூபித்துக் காட்டுவோம். மக்களை திசை திருப்புவதற்காகவே பொய் வழக்கு பதிவு செய்கின்றனர்.

திமுக அளித்த 505 வாக்குறுதிகளை முழுதாக நிறைவேற்ற முடியவில்லை. அதிலிருந்து மக்களை திசைதிருப்ப இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சயான், மனோஜ், வாளையார் ரவி உரையாடல், யூடியூப் சேனல் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அப்போதிலிருந்தே பொய் வழக்கு போட திமுக ஏற்பாடு செய்திருக்கிறது. ஆரம்ப கால்த்திலிருந்தே குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது திமுக. எங்களுக்கே இந்த நிலைமை. மக்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்?

இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். இதனை கேள்வி நேரத்தில் எடுத்துவைத்தும் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினுக்குத்தான் மடியில் கணமிருக்கிறது. அதனால்தான் துடித்துக் கொண்டிருக்கிறார்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x