அதிமுக, திமுகவினரால் சென்னை ஸ்தம்பித்தது: கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதி

அதிமுக, திமுகவினரால் சென்னை ஸ்தம்பித்தது: கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதி
Updated on
2 min read

அதிமுக நிர்வாகிகளின் இல்ல திருமண விழா, விருப்ப மனு தாக்கல் செய்ய திமுகவினர் திரண்டது போன்ற காரணங்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருமண விழா

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அதிமுகவை சேர்ந்த 14 ஜோடிக ளுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று காலையில் திருமணம் நடந்தது. இதனால் போயஸ் கார்டனில் இருந்து விழா நடைபெறும் ராயப்பேட்டை மைதானம் வரை வரவேற்பு பேனர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டன. முதல்வர் ஜெயலலிதா வரும் ராதாகிருஷ்ணன் சாலையில் அனைத்து சிக்னல்களிலும் போக்குவரத்து தடை செய்யப் பட்டது. இதனால் ராதாகிருஷ்ணன் சாலையை ஒட்டியுள்ள கதீட்ரல் சாலை, டிடிகே சாலை, நடேசன் சாலை, மெரினா கடற்கரை காமராஜர் சாலை உட்பட மயிலாப்பூர், கோபாலபுரம், ராயப்பேட்டையில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு செல்ல முடியாததால் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் செய்வதறியாமல் திகைத்தனர். ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியவில்லை.

ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து மயிலாப்பூர் செல்லும் சாலை அடைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் ஒயிட்ஸ் ரோடு வழியாக திருப்பிவிடப்பட்டன. ராயப்பேட்டை நெடுஞ்சாலையின் பெரும் பகுதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. எந்த விதமான அறிவிப்பும் இன்றி திடீரென தடை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் தவித்தனர்.

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட கதீட்ரல் சாலை, ராயப் பேட்டை நெடுஞ்சாலை, ஒயிட்ஸ் ரோடு போன்ற அனைத்து சாலைகளும் அண்ணா சாலை யுடன் தொடர்புடைய சாலைகள் என்பதால் இங்கு ஏற்பட்ட நெருக்கடி அண்ணா சாலை யையும் விட்டு வைக்கவில்லை. அண்ணா மேம்பாலம் உட்பட அண்ணா சாலை முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாமல் தேங்கி நின்றன. சென்னை நகரின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, ராயப் பேட்டை நெடுஞ்சாலை, ராதா கிருஷ்ணன் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ் சாலை, ஜி.பி.சாலை போன்றவை போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடியது. வாகனங்கள் செல்ல முடியாமல் சென்னையே சில மணி நேரம் ஸ்தம்பித்தது.

திருமண நிகழ்ச்சிக்கு வந்த அதிமுகவினர் தங்களது வாகனங்களை சாலைகளிலேயே விட்டு சென்றதும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணமாக அமைந்தது.

விருப்ப மனு தாக்கல்

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் விருப்ப மனு தாக்கல் செய்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான திமுகவினர் நேற்று காலையில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். அவர்கள் வந்த கார்கள் மற்றும் வாகனங்கள் அண்ணா சாலையிலேயே நிறுத்தப்பட்டன. மெட்ரோ பணிகளுக்காக சாலை குறுகி இருந்த இடத்தில் வாகனங் களும் நிறுத்தப்பட்டதால் அப்பகுதி யில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இங்கு தொடங்கிய போக்கு வரத்து நெரிசல் ஜி.என்.செட்டி சாலை வழியாக தி.நகரை அடைய அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதிமுக, திமுக கட்சியினரின் நிகழ்ச்சிகள் மற்றும் போலீஸாரின் கெடுபிடியால் சென்னை மாநகர் நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் குறிப்பிட்ட இடத்துக்கு திட்டமிட்டபடி செல்லமுடியாமல் தவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in