Published : 18 Aug 2021 03:12 AM
Last Updated : 18 Aug 2021 03:12 AM

அர்ச்சகர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவேன்; இந்து மதத்தில் தலையிடும் அதிகாரத்தை முதல்வருக்கு கொடுத்தது யார்?- பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

சென்னை

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ், பயிற்சி பெற்ற 29 ஓதுவார்கள் உட்பட 58 நபர்கள் பல்வேறு கோயில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம்வழங்கினார். இந்நிலையில், பல்வேறு கோயில்களில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் அர்ச்சகர்களுக்கு பதிலாக, புதிதாகநியமிக்கப்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், ‘‘ஏற்கெனவே பணியில் உள்ள அர்ச்சகர்கள் யாரும் பணியில் இருந்து அப்புறப்படுத்தப்படவில்லை. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை சீர்குலைக்க சதி நடக்கிறது’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அர்ச்சகர் நியமனத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்திசை’யிடம் அவர் கூறியதாவது:

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க, கருணாநிதி முதல்வராக இருந்தபோது சட்டம் கொண்டு வந்தார். ஆனால், நீதிமன்ற வழக்குகள் காரணமாக, அதை செயல்படுத்த முடியவில்லை. கருணாநிதி செய்த தவறை, அவரதுமகனான முதல்வர் ஸ்டாலின் செய்யமாட்டார் என்று நினைத்தேன்.

ஆனால், கடவுள் நம்பிக்கை இல்லாத, இந்து மதத்துக்கு எதிரானதிராவிடர் கழகம் போன்ற அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. பல்வேறு கோயில்களில் புதிதாக அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்து அறநிலையத் துறை சட்டத்தின்படி, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார், பூசாரிகளை நியமிக்கும் அதிகாரம் அறங்காவலருக்கு மட்டுமே உள்ளது. கோயிலை நிர்வாகம் செய்யும் அதிகாரமும் அறங்காவலருக்கே உள்ளது. சட்டம் இப்படி இருக்க, கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருப்பது கண்டனத்துக்கு உரியது. இந்து மத விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலி னுக்கு யார் கொடுத்தது?

தீட்சிதர்களிடம் இருந்து சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக உரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து வாதாடினேன். இதனால், சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடராஜர் கோயில் வழக்கில் பரம்பரை அர்ச்சகர்கள் உரிமையைஉச்ச நீதிமன்றம் நிலைநாட்டியுள்ளது. இத்தகைய சூழலில், அர்ச்சகர்களை நியமிக்கும் அறங்காவலர்களின் உரிமையில் அரசு தலையிட்டிருப்பது தவறான முடிவு.

எனவே, பல்வேறு சட்டங்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன். தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடு வேன்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

‘பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிகிறது’

சுப்பிரமணியன் சுவாமி நேற்றிரவு வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “தமிழக கோயில் அர்ச்சகர் நியமன பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. சட்டப்பேரவையில், இன்று (ஆக.17) பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ஏற்கெனவே பணியில் உள்ள அர்ச்சகர்கள், பூசாரிகள் யாரும் அகற்றப்படவில்லை. அகற்றும் திட்டமும் அரசிடம் இல்லை. 60 வயதை கடந்து ஓய்வு பெறும் அர்ச்சகர்களுக்கு தகுந்த பணி வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார். இதன் மூலம், இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x