

போலியாக பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ரத்து செய்வதற்கு பத்திரப் பதிவுத் துறை தலைவருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரி வித்தார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது நேற்று நடந்த விவாதம்:
தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகள், ஆக்கிரமிப்பால் 6,500 ஹெக்டேரில் இருந்து 1,500 ஹெக்டேராக சுருங்கியுள்ளது. கடந்த ஆட்சியில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சதுப்பு நிலக் காடுகள் தனியாருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: அரசு நிலங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குத்தகைக்கு விடப்பட்டு, காலம் முடிவடைந்த பிறகும் நிலங்கள் மீட்கப்படாமல் இருக்கின்றன. 4.50 லட்சம் ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. இவற்றை மீட்டெடுக்க இரண்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். பத்திரப் பதிவுத் துறையில் தவறாக பதிவு செய்த ஆவணங்களை அரசே திருத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டதிருத்தம் செய்யப்படும்.
அமைச்சர் பி.மூர்த்தி: தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் போலி ஆவணம், ஆள் மாறாட்டம் மூலம் பதிவு செய்வதாக தகவல்கள் வந்துள்ளன. போலியாக பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ரத்து செய்வதற்கு பத்திரப் பதிவுத் துறை தலைவருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. போலியான பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.