பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் தாமதம்- ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் தாமதம்- ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல்
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் ரூ.42 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 2018 மே மாதம் தொடங்கின.

இதில், காலவாக்கம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் 2 கழிவுநீருந்து நிலையங்கள், தினமும் 4 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையம், பேரூராட்சிப் பகுதியில் 23 கி.மீ. நீளத்துக்கு பாதாள சாக்கடைக் குழாய் புதைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு 75 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கரோனா ஊரடங்கு உத்தரவால், திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தற்போது மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், ஓஎம்ஆர் சாலையில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான குழாய்கள் அமைப்பதற்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, திருப்போரூர் ரவுண்டான பகுதியில் இருந்து இள்ளலூர் இணைப்பு சாலை வரை வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

எனவே, பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘‘நகரின் முக்கிய சாலையான ஓஎம்ஆர் சாலையில் பணிகள் நடைபெறுவதால், போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஓரிரு நாட்களில் பணிகளை நிறைவு செய்யும் வகையில், துரிதமாக மேற்கொண்டு வருகிறோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in