

சுதந்திர தினத்தின் சிறப்பு குறித்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் மத்தியில்நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ரயில்வே உள்ளிட்ட பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்களும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார் பில் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பல்வேறு அலங்கார வேலைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் ஆகி யோரின் தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்தியாவின் விடுதலைக்காக பாடுப்பட்ட வீரர்கள் பற்றி அறிந்துகொள்ள பல்வேறு அரிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதுபோல், ‘ஐ லவ் இந்தியா’ என்ற வாசகத்துடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வகையில் தனி இடத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இந்த இடத்துக்கு வந்து செல்ஃபி எடுத்து, அதை பல்வேறு சமூக வளைதளங்களிலும் பதிவிட்டு மகிழ்கின்றனர். நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு ‘மார்க் மெட்ரோ நிறுவனம்’ இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.