

தமிழகத்தில் நூறு சதவீதத் துக்கும்மேல் மின் உற்பத்தி இருப் பதால் மின்சார தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்திய காற்றாலைகள் சங்கத் தலைவர் கஸ்தூரி ரங்கையன் தெரிவித்துள் ளார்.
காற்றாலை மின் உற்பத்தி குறித்த 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் நேற்று தொடங்கியது. இதற்கு தேசிய காற்றாலை நிறு வனம், இந்திய காற்றாலை சக்தி கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. கருத்தரங்கை தமிழக மின்தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குநர் கே.சிவப் பிரகாசம் தொடங் கிவைத்தார்.
தேசிய காற்றாலை நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.கோமதிநாயகம் தனது அறிமுக உரையில், ‘‘காற்றா லை மின் உற்பத்தியை கணிக்கும் சேவையை இந்திய காற்றாலைகள் சங்கமும் தேசிய காற்றாலை நிறுவனமும் இணைந்து அளிக்க உள்ளன. இந்த சேவையால் காற்றின் வேகம், அடிக்கும் திசை ஆகியவற்றை 6 மாதங்கள் வரை முன்கூட்டியே கணித்துக் கூற முடியும். அதற்கேற்றவாறு மின் உற்பத்தி செய்யலாம். இதன்மூலம், நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்களின் தேவை குறைவதோடு, காற்று மாசடைவதும் குறையும்’’ என்றார்.
இந்திய காற்றாலைகள் சங்கத் தலைவர் பேராசிரியர் கே.கஸ்தூரி ரங்கையன் பேசியதாவது:
இக்கருத்தரங்கில் சுவீடன், ஜெர்மன், சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவில் இருந்து 100-க் கும் மேற்பட்ட பொறியாளர்கள் பங்கேற்றுள்ளனர். காற்றாலை மின் உற்பத்தி குறித்து திட்டமிடுவது, காற்றாலை மின்சாரத்தை திறமை யாக கையாள்வது குறித்து விவாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் 7,400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திறன் உள்ளது. இதற்காக 11,800 காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவர மின் உற்பத்தி 100 சதவீதத்துக்குமேல் உள்ளதால் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 106 துணை மின் நிலையங்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.
இக்கருத்தரங்கில் தேசிய காற்றாலை நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் பூபதி, தொழில்நுட்ப அதிகாரி மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்