நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பாலாற்றில் களிமண் தரைகீழ் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பாலாற்றில் களிமண் தரைகீழ் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை
Updated on
1 min read

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், பாலாற்றின் குறுக்கே களிமண்ணால் தரைகீழ் தடுப்பணை அமைக்க வேண்டும் என கீழ் பாலாறு வடிநிலக் கோட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, வேகவதி, செய்யாறு ஆகிய ஆறுகள் பல ஆண்டுகளாக வறண்டு காணப்பட்டன. இதனால், குடிநீர், விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. இதன் காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

இதையடுத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சியாக 2015-ல் முசரவாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில், ரூ.22 லட்சம் செலவில் வேகவதி ஆற்றின் குறுக்கே 120 மீட்டர் நீளம் மற்றும் 7 மீட்டர் ஆழத்துக்கு களிமண்ணால் தரைகீழ் நீர் நெறிச் சுவர் அமைக்கப்பட்டது.

ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஆறுகளில், களிமண்ணால் நீர் நெறிச் சுவர்களை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளனர். தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் இந்த முறை கையாளப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி, சோதனை அடிப்படையில் வேகவதி ஆற்றின் குறுக்கே, பூமிக்குள் களிமண்ணால் நீர் நெறிச் சுவர் கட்டப்பட்டுள்ளது.

இந்த களிமண் சுவரால் விஷார், மேட்டுக்குப்பம், திருப்புட்குழி, கிளார், முசரவாக்கம், தாமல், சித்தேரிமேடு, கீழம்பி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவில் உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதனால், பாலாற்றிலும் இதேபோன்று களிமண் சுவர் அமைத்தால் 200-க்கும் மேற்பட்ட ஏரிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு கூறியதாவது: களிமண், நீர் உட்புகாத தன்மை கொண்டது.

ஆற்றின் குறுக்கே களிமண்ணால் தரைகீழ் தடுப்பணை கட்டினால், ஆற்றில் வரும் மழைநீர் வேறு பகுதிக்கு ஊடுருவிச் செல்வது தடுக்கப்படும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். வேகவதி ஆற்றில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதனால், சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

தற்போது, கன மழையினால் காஞ்சிபுரம் பகுதியில் வறண்டு கிடந்த பாலாற்றில் லேசான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனால், ஆற்றின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதை தக்கவைத்துக் கொள்ளும் வகையில், பாலாற்றில் களிமண்ணாலான நீர் நெறிச் சுவர் கட்ட, கீழ்பாலாறு வடிநிலக்கோட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டு என்று அவர் கூறினார்.

இதுகுறித்து, கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட வட்டாரங்கள் தெரிவித்ததாவது: வேகவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைகீழ் களிமண் தடுப்பணையால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. இதனாலேயே, விவசாயிகள் தற்போது பாலாற்றிலும் களிமண் தடுப்பணை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in