Last Updated : 17 Aug, 2021 10:13 PM

 

Published : 17 Aug 2021 10:13 PM
Last Updated : 17 Aug 2021 10:13 PM

ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயில் பழுதானதால் நடுவழியில் நிறுத்தப்பட்ட விரைவு ரயில்கள்: பயணிகள் கடும் அவதி

ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயில் பழுதாகி நடுவழியில் நின்றது.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் ‘ஏர்ஓஸ் பிரேக் பைப்’ துண்டித்தால் சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச்செல்லும் விரைவு ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து 59 காலி பெட்டிகளுடன், சரக்கு ரயில் இன்று காலை 8.30 மணியளவில் ஜோலார்பேட்டை வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பத்துார் - ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு இடையே, தாமலேரிமுத்துார் ரயில்வே மேம்பாலம் அருகே சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ‘ஏர்ஓஸ் பிரேக் பைப்’ துண்டிக்கப்பட்டது.

இதையறிந்த, ரயில் இன்ஜின் ஓட்டுநர் மற்றும் கார்ட் ஆகிய இருவரும் சரக்கு ரயிலில் ஆய்வு மேற்கொண்டனர். ரயில் இன்ஜினில் இருந்து 53 மற்றும் 54 வது பெட்டிகளை இணைக்கும் பகுதியில் உள்ள ‘ஏர்ஓஸ் பிரேக் பைப்’ அதிக அழுத்தத்தால் துண்டிக்கப்பட்டது தெரிந்தது. ஏர்ஓஸ் பிரேக் பைப் துண்டிக்கப்பட்டால் அதற்கு அடுத்தடுத்த உள்ள பெட்டிகளின் சர்க்கரம் தானாக ஏர் லாக் ஆகி, ரயில் சக்கரங்கள் சுழலாமல் ரயில் நடுவழியில் தானாக நின்றது தெரியவந்தது.

இது குறித்து, ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை மார்கத்தில் சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதைதொடர்ந்து, ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்வே மெக்கானிக்கல் பிரிவு ஊழியர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரத்தில் துண்டிக்கப்பட்டிருந்த

ஏர்ஓஸ்பிரேக் பைப்பை சீரமைத்தனர். அதன்பிறகு சரக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை யார்டு பகுதிக்கு வந்தடைந்தது.

இதனால், கோயம்புத்துாரில் இருந்து சென்னை வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில், மங்களூரில் இருந்து சென்னை வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில், கோயம்புத்துாரில் இருந்து திருப்பதிக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படும் இன்டர் சிட்டி விரைவு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு, சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து தாமதமாக அங்கிருந்து புறப்பட்டது. இதனால், அதில் பயணித்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x