தமிழகத்தில் போதுமான இலவசக் கழிப்பறைகளை ஏற்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் போதுமான இலவசக் கழிப்பறைகளை ஏற்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் போதுமான எண்ணிக்கையில் இலவச பொது கழிப்பறைகளை ஏற்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களுக்கு சுகாதாரமான, இலவசக் கழிப்பறைகளை ஏற்படுத்த வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்ட கழிப்பறைகளில் ரூ.5 முதல் 10 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதில்லை.

எனவே, தமிழகத்தில் விமான நிலையம், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், கோயில்கள் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச கழிப்பறை வசதி ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவு:

''தமிழகத்தில் பொதுமக்களுக்குத் தூய்மையான சுகாதாரமான கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். இதனால் வாய்ப்பிருக்கும் இடங்களில் எல்லாம் போதுமான எண்ணிக்கையில் இலவச பொதுக் கழிப்பறைகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுக்கழிப்பறைகள் பராமரிப்புப் பணி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடைபெற வேண்டும். கழிப்பறைகளை முறையாகப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்''.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in