Published : 17 Aug 2021 07:27 PM
Last Updated : 17 Aug 2021 07:27 PM

நல்ல உள்ளம்தான் கடவுள்; தமிழில் இறைவன் முன் பாடுவது ஆத்ம திருப்தி: பெண் ஓதுவார் நெகிழ்ச்சிப் பேட்டி

பெண் ஓதுவார் சுஹாஞ்சனா.

'தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி' என, 28 வயதான சுஹாஞ்சனா, ஓதுவார் பணியின் முதல் நாளில் கர்ப்பகிரகம் முன் நின்று ஓங்கி குரலெடுத்து, பரவசத்துடன் பாடுவதுதான், சமூக வலைதளங்களில் சமீபத்திய வைரல்.

சுஹாஞ்சனா, தன் விருப்பமான இறைப்பணியான ஓதுவார் பணியில், சமீபத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். கடந்த 14-ம் தேதி ஆகம விதிகளில் பயிற்சி பெற்ற பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள், 'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' அரசாணையின்கீழ், தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில், சுஹாஞ்சனாவுக்கு, சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஓதுவாராக நியமிக்கப்பட்டதற்கான நியமன ஆணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கியபோது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அங்கயற்கண்ணி என்பவர், முதன்முறையாக கடந்த 2006-ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில், உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயிலில் முதல் பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்டார். அதன்பின், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின், பெண் ஒருவர் ஓதுவாராக நியமிக்கப்பட்டது பல தரப்பினரிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் சுஹாஞ்சனாவிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் பேசினோம்.

"கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தான் என் சொந்த ஊர். அம்மா கோமதி - அப்பா சுப்பிரமணி. அப்பா டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். சகோதரர் ஒருவர் இருக்கிறார். யாரும் இத்தகையை இறைப்பணியில் இருந்ததில்லை. சிறு வயதில் இருந்தே கோயிலுக்கு செல்வதும் அங்கு இறைவன் பாடல்களை பாடுவதும் விருப்பம். நவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விசேஷ நாட்களில் கோயிலுக்கு சென்று பாடுவேன்.

இரண்டரை வயதிலேயே கோயில்களில் மற்றவர்கள் பாடுவதைக் கேட்டு அப்படியே திரும்பிப் பாடுவேன் என வீட்டில் சொல்வார்கள். இறைவன் மீதிருந்த நாட்டத்தினால், முறையாக இசை படிக்க வேண்டும் என விரும்பினேண். என் குடும்பத்தினரும் சம்மதித்தனர். பத்தாம் வகுப்பு முடித்த பின்னர், கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குமார சுவாமிநாத ஓதுவார் ஐயாவிடம் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளை படித்தேன்.

பின்னர், மங்கையர்க்கரசியர் அறநெறி அறக்கட்டளை மூலம், 5 ஆண்டுகள் பள்ளிகளில் 5-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம், நல்லொழுக்கம் குறித்த அறநெறி வகுப்புகள் கற்றுக்கொடுத்தேன்.

தேவாரம், திருவாசகம் ஆகியவை இறைவனின் அருளாளர்கள் பாடி அருளிய பாடல்கள். இறைவன் நமக்கு நற்துணையாக இருக்கிறார் என்பதே இப்பாடல்களின் முதன்மையான பொருள். அந்த பாடல்கள் மீதான ஈர்ப்பால், எனக்கு ஓதுவாராக வேண்டும் என்ற ஈடுபாடு வந்தது.

ஓதுவார் பணிக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்ற விளம்பரம் பார்த்தேன். விண்ணப்பித்தேன். 'பாடும் பணியே பணியாய் அருள்வாய்' என இறைவனிடம் வேண்டினேன். அந்த பணி கிடைத்திருக்கிறது. வெகு ஆண்டுகள் கழித்து பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்டதில் பெரு மகிழ்ச்சி, தமிழக அரசுக்கு நன்றி.

முதல்முறையாக ஓதுவாராக கோயிலில் பாடியபோது ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது. மிகவும் உற்சாகத்துடன் இந்த பணியை தொடங்கியுள்ளேன். என்னுடைய நியமனம் மூலம், விருப்பமுள்ள நிறைய பெண்கள் ஓதுவார் பணிக்கு வர வேண்டும் என முயற்சி எடுப்பார்கள் என நினைக்கிறேன்" என்றார்.

தனக்கு விருப்பமான ஓதுவார் பணியை மேற்கொள்ள கணவர் வீட்டிலும் ஊக்கமளித்தனர் என்கிறார், சுஹாஞ்சனா.

"2019-ல் திருமணமான பின் சென்னைக்கு வந்துவிட்டேன். இறைவனுக்கு செய்யக்கூடிய பணி, மகிழ்ச்சியாக செய், உனக்கு உறுதுணையாக இருப்போம் என்று கணவர் வீட்டில் தெரிவித்தார்கள்" என்கிறார், சுஹாஞ்சனா.

கோயில்களில் ஓதுவார்களின் பணி என்ன என்பது குறித்து பகிர்ந்து கொண்ட சுஹாஞ்சனா, "காலை, மாலை என இரு வேளையும் வழிபாடுகள் முடிந்தபின், தேவாரம், திருவாசகம், திருநிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவற்றை பாடுவதுதான் ஓதுவார்களின் பணி. ஓதுவார்கள் கருவறைக்கு வெளியே அர்த்தமண்டபத்தில் நின்றுதான் பாடுவார்கள். அதுதான் மரபு. மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் மூத்த திருப்பதிகம் பாடி அருளியுள்ளார். மங்கையர்க்கரசியார் சைவ நெறிமுறைகளை பரப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். சமகாலத்தில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது" என்றார்.

பெண் ஓதுவாரை பொதுமக்கள் ஏற்றுக் கொள்வார்களா என கேட்டால், "கோயிலின் அர்ச்சகர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியாக என்னை பாராட்டுகின்றனர். பொதுமக்கள் வந்து ஆசீர்வாதம் பெறுகின்றனர், வாழ்த்து தெரிவிக்கின்றனர். குரல் வளம் குறித்தும் பாராட்டுகின்றனர்" என்கிறார் சுஹாஞ்சனா.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்ற வழக்கம் உள்ள நிலையில், ஓதுவாருக்கும் இவ்விதி பொருந்துமா என கேள்வி எழுப்புகையில், "கோயில் விதிமுறைகளுக்குட்பட்டு செயல்படுவேன்" என பதிலளித்தார்.

தமிழில் இறைவன் முன் பாடுவது எத்தகைய உணர்வை ஏற்படுத்துகிறது என கேட்டோம். "தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்' என்பது தேவாரப் பாடல். தமிழோடு இசையாய் இருக்கக்கூடியவர் இறைவன் என்பது இதன் அர்த்தம். தமிழில் பாடும்போது ஆத்ம திருப்தி கிடைக்கிறது. தமிழ் மொழியில் பாடும்போது இறைவன் முன் உணர்ந்து பாடும் சூழல் இருக்கிறது. உள்ளார்ந்து பாடுவது போல் உள்ளது" என்றார்.

சுஹாஞ்சனாவிடம் 'உங்களைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் யார்?' எனக் கேட்டேன். 'நல்லது நினைக்கக்கூடிய அனைவரும் கடவுள்தான். நல்ல உள்ளம்தான் கடவுள்" என நிறைவுசெய்தார்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x