

தமிழகத்தின் ஆன்லைன் சூதாட்டங்களைக் கட்டுப்படுத்த 6 மாதத்தில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கக்கோரி மதுரை அண்ணாநகர் வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கே.நீலமேகம், முகமதுரஸ்வி வாதிட்டனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
''இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததும், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், தமிழக அரசின் தடையாணை ரத்து செய்யப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டங்களை முறைப்படுத்த உரிய வழிகாட்டுதலுடன் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என தமிழக சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் பண இழப்பும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆன்லைன் சூதாட்டங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது.
அதன்படி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு 6 மாதத்திற்குள் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது''.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.