

மதுரை தோப்பூரில் 3 ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டி முடித்து, செயல்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு இன்று அளித்த தீர்ப்பு:
''தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டபோது, பிற மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. தமிழகத்தில் இதுவரை கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை.
இந்த உத்தரவு நகல் கிடைக்கப் பெற்ற நாளில் இருந்து 3 ஆண்டுக்குள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது''.
இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.