அதிக பாரமேற்றிச் செல்லும் லாரிகள், தரமற்ற எம்-சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அதிக பாரமேற்றிச் செல்லும் லாரிகள், தரமற்ற எம்-சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Updated on
1 min read

கரூரில் செயல்படும் அனைத்து எம்-சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதிக பாரமேற்றிச் செல்லும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் செல்ல.ராசாமணி உள்ளிட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவிடம் இன்று மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் செல்ல.ராசாமணி கூறியதாவது:

''கரூர், திருச்சி உட்பட மாநிலம் முழுவதும் லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே மணல், ஜல்லி, செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். அதிக பாரம் ஏற்றிச் செல்வதை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்.

மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையில் கரூர் மாவட்டத்தில்தான் எம்-சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பொதுப்பணித் துறையின் அனுமதி பெறாமல் செயல்படும் நிறுவனங்களும் இருக்கின்றன. என்-சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் பொதுப்பணித் துறையின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாமல், தரமற்ற எம்-சாண்டை உற்பத்தி செய்து, அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் வருகின்றன. ஆனால், பொதுப்பணித் துறையினரோ, கனிமவளத் துறையினரோ, வருவாய்த் துறையினரோ சோதனை நடத்துவதில்லை.

எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்-சாண்ட் உற்பத்தி நிறுவனங்களிலும் சோதனை நடத்தி, தரமற்ற எம்-சாண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களைக் கண்டறிந்து அவை மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு பாரம் ஏற்றி வரும் லாரிகள் அனைத்தையும், அலுவலர்கள் சோதனை நடத்தி, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் லாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிக பாரம் ஏற்றி வருவதையும், தரமற்ற எம்-சாண்ட் உற்பத்தி செய்வதையும் தடுக்க அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காவிடில் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், மக்களின் கட்டுமானத் தேவையை நிறைவு செய்யும் நோக்கிலும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். தேவைப்பட்டால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை நாங்களே பிடித்து அரசு அலுவலர்களிடம் ஒப்படைப்போம்’’.

இவ்வாறு செல்ல.ராசாமணி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in