Last Updated : 17 Aug, 2021 03:16 PM

 

Published : 17 Aug 2021 03:16 PM
Last Updated : 17 Aug 2021 03:16 PM

ஆப்கனில் இருந்து இந்தியர்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

கோவை

நாடு முழுவதும் பாஜகவினர் நடத்தும் யாத்திரையால், கரோனா 3-வது அலை வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்பாக அமையும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் கோவையில் இன்று (ஆக. 17) தொடங்கியது. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். மேலும், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். இந்த மாநிலக் குழுக் கூட்டத்தின் இரண்டாவது நாள் கூட்டம் நாளை (ஆக.18) நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் நிறைவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

சீதாராம் யெச்சூரி கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கரோனா 3-வது அலை நெருங்கி வரும் சூழலில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும். தடுப்பு மருந்து இருப்பு குறித்து தெளிவான தகவலை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய தமிழக முதல்வர் செங்கல்பட்டு குன்னூர் ஆகிய பகுதிகளில் அனுமதி கேட்டுள்ளார்.

பெட்ரோலியப் பொருட்களுக்கு கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளால் மட்டுமே கடந்த 2020-21ஆம் ஆண்டில் ரூ.3.71 லட்சம் கோடியை மத்திய அரசு ஈட்டியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் மீது போடப்பட்ட வரியைக் குறைப்பதன் மூலமாகவே, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க முடியும். பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

பெகாசஸ் செயலி மூலம் இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோர் உளவு பார்க்கப்பட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதி இணையம் வழியாக 20 எதிர்க்கட்சியினர் இது தொடர்பாக கலந்து ஆலோசிக்க உள்ளோம்.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் நிலவரங்களை முன்னரே அறிந்தும், அந்நாட்டின் காபூலில் இருந்து இந்தியர்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது. அங்கிருந்து எத்தனை இந்தியர்கள் இங்கு அழைத்து வரப்பட்டனர் என்ற தகவல் மத்திய அரசிடம் இல்லை.

தற்போது இந்தியாவில் 126 இடங்களில் பாஜக யாத்திரை நடத்தி வருகிறது. கரோனா தொற்றின் மூன்றாவது அலை வேகமாகப் பரவுவதற்கு இந்த யாத்திரை வழிவகுக்கும்".

இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x