சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெறுக: ராமதாஸ்
சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.17) தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
"வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை 850 ரூபாயிலிருந்து 875 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. கரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்!
கடந்த 6 மாதங்களில் சமையல் எரிவாயு விலை 710 ரூபாயிலிருந்து 165 ரூபாய், அதாவது 23% உயர்த்தப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு என்ற அத்தியாவசியப் பொருளின் விலையை ஆண்டுக்கு 46% என்ற அளவுக்கு உயர்த்துவது நியாயமா? என எண்ணெய் நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும்!
சமையல் எரிவாயு விலையைக் குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். தமிழக அரசும் அதன் பங்குக்கு ரூ.100 மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்!".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
