

‘தி இந்து' குழுமத்தின் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பொருட்டு ‘மீண்டு எழுகிறது சென்னை' எனும் பெயரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிவாரணப் பணிகளில் தன்னார்வத்தோடு ஈடுபட்ட தொண்டர்களைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழும், நினைவுப் பரிசுகளும் நேற்று வழங்கப்பட்டன.
விழாவுக்கு ‘தி இந்து' தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் தலைமை வகித்தார்.
டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் வணங்காமுடி பேசும்போது, “பல்வேறு திசைகளில் சிதறிக் கிடந்த நம்மை ‘தி இந்து' ஒரு குடும்பமாக இணைத்திருக்கிறது. இளைஞர்கள் என்றாலே பொறுப்பற்றவர்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், இந்த மழை வெள்ள நிவாரணப் பணிகளில் அவர்கள் செய்த பணிகள் அவர்கள் மேல் இருந்த அவப்பெயரை நீக்கியுள்ளது. இன்றைக்கு ஒரு இயக்கம்போல் நம் அனைவரையும் இணைத்திருக்கிறது” என்றார்.
விழாவில், நிவாரணப் பணிகள் செய்த தன்னார்வலர்களைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்களையும், நினைவுப் பரிசினையும் ‘தி இந்து’ குழும இயக்குநர் விஜயா அருண் வழங்கினார். காவல்துறை உதவி ஆணையர் பீர் முகமது, சென்னை ஸ்கூல் ஆஃப் பேங்கிங் நிறுவனத்தைச் சேர்ந்த ஞானசேகரன், சாய்ராம் கல்விக் குழுமத்தின் சதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ‘தி இந்து’ இணையதள ஆசிரியர் பாரதி தமிழன் நன்றியுரையாற்றினார்.