

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித் துள்ளது.
இதன்படி, கார் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு அதற்கான பரிசீலனைக் (புராசசிங்) கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. அத்துடன், யோனோ செயலி மூலம் கார் கடன் பெற விண்ணப்பித்தால், வட்டியில் 25 அடிப்படை புள்ளிகள் சலுகைகள் வழங்கப்பட்டு, ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சமாக வருடத்துக்கு 7.5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
இதேபோல், நகைக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வட்டியில் 75 அடிப்படை புள்ளிகள் சலுகைகள் வழங்கப்பட்டு, ஆண்டொன்றுக்கு 7.5 சதவீதமாக வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிநபர் மற்றும் ஓய்வூதிய கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பரிசீலனைக் கட்டணம் நூறு சதவீதம் ரத்து செய்யப்படும். கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டமுன்கள சுகாதாரப் பணியாளர்கள் தனிநபர் கடன் பெற விண்ணப்பித்தால், அவர்களுக்கு வட்டியில் 50 அடிப்படை புள்ளிகள் சலுகை வழங்கப்படும்.
பிளாட்டினம் கால வைப்பு என்ற திட்டத்தின் கீழ், 75 நாட்கள், 75 வாரம் மற்றும் 75 மாதங்களுக்கு ஆக.15 முதல் செப்.14-ம் தேதி வரை செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வழங்கப்படும் வட்டியில், கூடுதல் வட்டியாக 15 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.