

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் கோயில்களில் புதிதாக அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பழைய அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. எனினும், அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்கள் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்களுக்கு பல்வேறு கோயில்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆணை பெற்ற அர்ச்சகர்கள் பணியில் இணைந் துள்ளனர்.
இந்நிலையில், சில கோயில்களில் ஏற்கெனவே பணியில் இருக்கும் அர்ச்சகர் பணியிடத்துக்கு புதிதாக அர்ச்சகர்களை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள் அப்பணியிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
மேலும், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோயிலில் அர்த்தஜாம பூஜைகள் முடிந்த பின்பு புதிதாக பொறுப்பேற்றவர் அதிகாரிகள் முன்னிலையில் பூஜைகளை மேற்கொண்டதாக சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட அர்ச்சகர்கள் சிலர் கூறியதாவது: நாங்கள் ஏற்கெனவே பல ஆண்டுகளாக அர்ச்சகர்களாக பணியாற்றி வருகிறோம். ஆனால், எங்களுடைய பணியிடத்திலேயே புதிதாக அர்ச்சகரை நியமனம் செய்துள்ளனர். இதனால், பல ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டுள்ள எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே,புதிய அர்ச்சகர்களை நியமிக்கும்போது அவசர கதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காலியிடம் இருக்கும் இடத்தில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கோயில்களில் தினக்கூலி அடிப்படையில் அர்ச்சகர்கள் பணியாற்றி வந்தனர். ஒவ்வொரு கோயில்களிலும் குறிப்பிட்டபணியாளர்கள் தான் பணியாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. அதனடிப்படையில், ஓய்வு பெறும் வயது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டுதான் தற்போது நிரந்தர அர்ச்சகர்கள் அதே பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பழைய அர்ச்சகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளை மீறி பூஜைகள் நடைபெறவில்லை. ஆகம விதிகள் மீறப்பட்டதாக பரவிய செய்தியில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
இதற்கிடையே, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை வரவேற்று, கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலில் நேற்று கிராம பூசாரிகள், பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.