Published : 17 Aug 2021 03:15 AM
Last Updated : 17 Aug 2021 03:15 AM

தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணிக்கு தயாராகும் தேமுதிக

தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக தயாராகி வருகிறது. சுமார் 8 சதவீத இடங்களை கேட்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. பின்னர், அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்டது. விருத்தாசலத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா போட்டியிட்டார். ஆனால், ஒரு தொகுதியில்கூட தேமுதிக வெற்றி பெறவில்லை.

உடல்நலக் குறைவு காரணமாக இத்தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. ஆனாலும், தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த அவர், தற்போது வீட்டிலேயே ஓய்வில் உள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தொடங்கி, தேர்தலுக்கு தேமுதிகவினர் தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்.

இதற்கிடையில், பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள திமுகவுடன் தேமுதிக தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறது.

கூட்டணி அச்சாரம்

முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் விஜயகாந்தை அவரது சாலிகிராமம் இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதுமரியாதை நிமித்தமான சந்திப்புஎன்று கூறப்பட்டாலும், கூட்டணிக்கான அச்சாரம் என்றும் பரவலாக கருத்து எழுந்தது.

இந்த சூழலில், வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க பெரும்பாலான தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால், திமுக கூட்டணியில் ஏற்கெனவே பல கட்சிகள் இருப்பதால், இடங்கள் ஒதுக்கீட்டில் சிக்கல் இருக்கும். எனவே, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தேர்தல் தேதி அறிவித்த பிறகே, கூட்டணி உறுதியாவது குறித்து தெரியவரும். கூட்டணி உறுதியானால், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 முதல் 8 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x