

முன்னாள் அதிமுக அமைச்சர்எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமாக இருந்த அரசு ஒப்பந்ததாரரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும்அவருடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த10-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான சொத்துஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள், வங்கி கணக்கு ஆவணங்கள், ரூ.2 கோடி வைப்பு நிதி ஆவணம், வங்கி லாக்கர் சாவிகள், ரூ.13 லட்சம் பணம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சோதனையில் கைப்பற்றிய ஆவணங்களை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சென்னை எம்ஜிஆர் நகரில் வசிக்கும் அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 5 பேர் நேற்று மாலை சோதனை நடத்தினர்.
இதில் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அரசு ஒப்பந்ததாரரான வெற்றிவேல், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியிடம் உதவியாளராக இருந்துள்ளார். எஸ்.பி.வேலுமணிக்கும் நெருக்கமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது.