Published : 17 Aug 2021 03:15 AM
Last Updated : 17 Aug 2021 03:15 AM

வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தருவதாக மக்களிடம் பணம் வசூல்: ஆட்சியர் அலுவலகத்துக்கு படையெடுக்கும் போலி சமூக ஆர்வலர்கள்

திருப்பூர்

வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தருவதாக மக்களிடம் பணம் வசூலில் ஈடுபடும் போலி சமூக ஆர்வலர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பொருளாதார இழப்பை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பெரும்பாலும் இலவச வீட்டுமனை, குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கோரி குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பகுதியில் இருந்து பொதுமக்கள் வருவார்கள். ஆனால், நேற்று ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்புக்கு உள்ளானது.

இந்நிலையில், அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுவதாக, சில இடைத்தரகர்கள் பொதுமக்களுக்கு தவறான தகவல்களை பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரே இடத்தில் நேற்று நூற்றுக்கணக்கானோர் அமர்ந்தனர்.

இதுதொடர்பாக பல்லடம் சாலையை சேர்ந்த சே.பாலசுப்பிரமணியம் கூறும்போது, "இலவச வீட்டுமனை பட்டா கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தால், உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கப்படுவதாக, மக்களின் அறியாமையை சில கும்பல் தவறுதலாகவும், சுயலாபத்துக்காகவும் பயன்படுத்துகிறது. வட்டாட்சியர் அலுவலகம் போன்று, வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் ஆட்சியர் அலுவலகத்திலும் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சில கும்பல் வலம் வருகிறது. இதனால் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. கரோனா சூழலால் பொதுமக்களிடம் போதிய வருமானம் இல்லாத நிலையில், கடைசி நம்பிக்கையாக சொந்த இடம் கிடைத்தால் போதும் என நம்பி வந்து மனு அளிக்கின்றனர். இதற்காக ஒரு நாள் வேலை இழப்பு, மனு செலவு ரூ.50, தரகர்களுக்கு ஒரு தொகை என வருவாய் இழப்புக்கு ஆளாகின்றனர்.

இதன் உச்சகட்டமாக, இலவச வீட்டுமனை மற்றும் குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வாங்கி தருவதாகக் கூறி, ஒரு மனுவுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரை தொகை நிர்ணயித்து பணம் பெறும் சூழலும் அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் நிலை உள்ளது" என்றார்.

காங்கயத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, "மனு அளித்தால் இலவச வீட்டுமனை வழங்குவதாக ஊரில் கூறியதன்பேரில், இங்கு மனு அளிக்க வந்தோம். காலை 8.30 மணிக்கு ஊரில் கிளம்பி, இங்கு மனு அளிப்பதற்குள் மதியம் 3 மணி ஆகிவிட்டது. காலை, மதியம் சாப்பிடவில்லை. குழந்தைகள் பசி தாங்காது என்பதால், வடை மற்றும் தேநீர் வாங்கி கொடுத்துவிட்டு காத்திருக்கிறோம். இடம் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி" என்றார்.

திருப்பூர் மாநகர உளவுத் துறை போலீஸார் கூறும்போது, "ஆட்சியர் அலுவலகத்தில் போலி சமூக ஆர்வலர்கள் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களும், தங்களது பகுதியில் ஏதாவது ஒரு இடம் கிடைத்தால்போதும் என்ற நம்பிக்கையில் வருகின்றனர். தரகர்கள், போலி சமூக ஆர்வலர்களாக மாறி, பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சூழல் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x