Published : 17 Aug 2021 03:15 AM
Last Updated : 17 Aug 2021 03:15 AM

அரசு கட்டுப்பாட்டில் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயில்: இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கைக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு

மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் முகப்பு.

சென்னை

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் கொண்டு வரப்பட்டுள்ளதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் பேயாழ்வார் கோயில், பழமைவாய்ந்த தொண்டைநாட்டுத் தலமாகும். இக்கோயில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வாரின் அவதாரத் தலமாகவும் அமைந்துள்ளது. டிரஸ்டிகள் மூலம் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பேயாழ்வார் கோயிலின் தக்கார் பொறுப்புகளை, கடந்த 13-ம் தேதி தன்னிச்சையாக ஏற்கப்பட்டதாக அறநிலையத் துறை உதவி ஆணையர் அறிவித்தார். இதன் மூலம், இக்கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் திடீரென்று கொண்டுவரப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மூத்த பத்திரிகை\யாளர், ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தியிடம் கேட்டபோது, "சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு `நாங்கள் இந்து விரோதி இல்லை, வாக்களியுங்கள்' என்று கூறி திமுக மக்களிடம் வாக்கு கேட்டது. தேர்தலுக்குப்பிறகு, போர்வைபோட்டு மறைத்து வந்த அதன் இந்து விரோதம் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. ‘அனைத்து சாதி அர்ச்சகர்’ என்பதை தேர்தல் அறிக்கையில் கூறாமல், தேர்தலுக்குப் பிறகு அறிவித்தது ஓர் உதாரணம்.

இந்து கோயில் பாரம்பரியம் என்பது அனைத்து ஜாதிகளாலும், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் வரும், போகும். ஆட்சி இருக்கும். வீழும். ஆனால் பாரம்பரியம் அரசை நம்பி இருந்ததில்லை. அரசை மீறி தொடர்ந்து வருகிறது.

இந்த பாரம்பரியத்தை அழிக்க திமுக செய்யும் முயற்சி பெரும்கேடு விளைவிக்கும். அனைத்து சாதி அர்ச்சகர்கள் என்பதில், எந்த ஜாதி என்று சாதிகளுக்குள் பிரச்சினை ஏற்பாடும். திமுக இல்லாத பிரச்சனையை உருவாக்குகிறது. அந்த இந்து விரோத போக்குதான், கோயில்களை தன் ஆதிக்கத்தில் கொண்டுவரும் முயற்சிகளில் வெளிப்படுகிறது.

இருக்கும் கோயில்களையே ஒழுங்காகப் பராமரிக்க முடியவில்லை. இச்சூழலில், ஆதிகேசவப் பெருமாள் கோயிலை கையில் எடுப்பது திமுகவின் இந்து விரோத வெளிப்பாடுதான். இந்துக்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்பதால்தான், திமுக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. இந்துக்கள் ஒன்றுபட்டு இதுபோன்ற செயல்களை எதிர்க்கவில்லை என்றால், திமுக இந்து விரோத செயல்களை தொடரவே செய்யும்" என்றார்.

தேவையற்ற செயல்...

இந்து முன்னணியின் சென்னை மாநகரத் தலைவர் ஏ.டி.இளங்கோவன் கூறும்போது, "அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல கோயில்களில் பராமரிப்பின்றி உள்ளன. ஏற்கெனவே உள்ள கோயில்களையே பராமரிக்க முடியாத நிலையில், புதிய கோயில்களை கையகப்படுத்துவது தேவையற்றது.

கோயிலில் தவறு நடந்திருந்தால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்து, உரிய காலஅவகாசம் அளிக்க வேண்டும். தவறு இருந்தால் அதை சரி செய்ய வேண்டியதுதான் அறநிலையத் துறையின் கடமை. அதைவிடுத்து, திடீரென்று முடிவெடுத்து, உடனடியாக கோயிலை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அண்மைக்காலமாக, பாரம்பரிய பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வரும் பழமையான கோயில்களை, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் திட்டமிட்டு நடைபெற்று வருகிறதோ என்ற ஐயம் எழுகிறது" என்றார்.

மயிலாப்பூர் கேசவப் பெருமாள் சந்நிதி தெருவைச் சேர்ந்த பக்தர் கேசவதாசன் கூறும்போது, "பல ஆண்டுகளாக ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு வந்து செல்கிறேன். கோயிலில் பூஜைகள் உரிய முறையில் நடைபெற்று, பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யபட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு மரபு, பழக்கவழக்கங்கள் உள்ளன. அவ்வாறு இருக்கும்போது, திடீரென்று அறநிலையத் துறை கோயிலை கையில்எடுப்பது சரியானதாக இருக்காது. அறநிலையத் துறையின் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது" என்றார்.

இது தொடர்பாக அறநிலையத் துறையின் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஆதிகேசவப் பெருமாள் கோயிலை நிர்வகித்து வந்தவர்களிடம் முறையாக தகவல் தெரிவித்து, சட்டப்படிதான் உதவி ஆணையரை தக்காராக நியமனம் செய்துள்ளோம். அவசரகதியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கெனவே, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பல பெருமாள் கோயில்களில் ஆகம விதிகளைப் பின்பற்றி பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, ஆதிகேசவப் பெருமாள் கோயிலிலும் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடத்தப்படும். மேலும், கோயிலுக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும்" என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாத நிலையில், மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலேயே இதுபோன்ற சர்ச்சைக்குரிய செயல்களில் அரசு ஈடுபடுவதாகக் கூறும் பக்தர்கள், இந்து சமயம் சார்ந்த விஷயங்களில் மட்டுமே இதுபோன்ற புண்படுத்தும் வகையிலான முடிவுகளை அரசு எடுப்பதாகவும் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x