

காஞ்சிபுரம் மற்றும் செங்கை மாவட்டங்களில் பொதுப்பணித் துறையின் தர நிர்ணயச் சான்று பெறாமல், கல் அரவை ஆலைகள் எம் மற்றும் சிஎஸ் சாண்ட் விற்பனை செய்வதால் மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 187மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 269 என 456 கல் குவாரிகள்மற்றும் கல் அரவை ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில், சுற்றுச்சூழலுக்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம், கனிமவளத்தை முறையாக வெட்டி எடுப்பதற்காக கனிமவளத் துறையின் அனுமதிகளைப் பெற்று இந்த குவாரிகள் இயங்கி வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஆற்று மணலுக்கு இணையான எம்-சாண்ட் மற்றும் சிஎஸ்-சாண்ட் தயாரிக்கும் பணிகளில் இந்த குவாரிகள் ஈடுபட்டுள்ளன. இந்த குவாரிகளில் தயாரிக்கப்படும் எம்-சாண்ட் மற்றும் சிஎஸ்-சாண்ட்,கட்டுமானங்களுக்கு பயன்படுத்தும் வகையில் உறுதித்தன்மை கொண்டதா என ஆய்வு செய்து, பொதுப்பணித் துறை (கட்டுமான பிரிவு) தர நிர்ணயச் சான்று வழங்கினால் மட்டுமே விற்பனை செய்ய முடியும்.
ஆனால், இந்த இரு மாவட்டங்களில் 50 குவாரிகளுக்கு மட்டுமே பொதுப்பணித் துறை தர நிர்ணயச் சான்று வழங்கியுள்ளது. ஆனால், கட்டுமானத்துக்கு ஏற்ற உறுதித்தன்மை இல்லாத எம்-சாண்ட் மணல், இந்த குவாரிகளில் சட்டவிரோதமாக தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு கனிமவள நிறுவனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறை, தரமற்ற எம்-சாண்ட்தயாரித்து விற்றால் 2 ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட புதிய சட்டத்திருத்த கொள்கையை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.ஆனால், இந்தச் சட்டம் இன்னும் அனுமதி பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால், மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பொறியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொதுப்பணித் துறையின் அனுமதி கிடைக்காமல் இயங்கி வரும் குவாரியில் எம்-சாண்ட் செயற்கை மணலில், கிரஷர் டஸ்ட் அதிக அளவு கலந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. கிரஷர் டஸ்ட்என்பது ஜல்லிகளை உடைக்கும்போது உருவாகும் கழிவுப் பொருள்.இவற்றை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது.
இவற்றை பயன்படுத்தி பூச்சுவேலை உள்ளிட்ட இதர வேலைகளை மேற்கொண்டால், வலுவற்ற கட்டமைப்பு உருவாகிவிடும் என்ற அச்சம் உள்ளது. அதனால், தமிழகஅரசு அறிவுறுத்தலின்படி பொதுப்பணித் துறையின் கீழ் வழங்கப்படும் எம்-சாண்ட் தரச் சான்றிதழ் பெறாத ஆலைகளிலிருந்து விற்கப்படும் செயற்கை மணலின் தரத்தை ஆய்வுசெய்து, தரமான எம்-சாண்ட் மூலம் வலுவான கட்டிடங்களை கட்டுவதற்கு வழிவகுக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பேராபத்து வருவதற்கு முன்பே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, கனிமவளத் துறைமற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பொதுப்பணித் துறையினர் கட்டுமானப் பிரிவின் கீழ் தர நிர்ணய சான்றிதழையும், நிறுவனங்கள் பெற வேண்டும் எனஅரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால்,பொதுப்பணித் துறையால் வழங்கப்படும் தர நிர்ணயச் சான்று பெற்றிருந்தால் மட்டுமே குவாரி, கல்அரவை ஆலைகள் இயங்க வேண்டும் என சட்டத்திருத்தம் இன்னும் கொண்டு வரப்படவில்லை. மேலும்,அனுமதி பெறாத பல எம்-சாண்ட்நிறுவனங்கள், அனுமதி கோரி பொதுப்பணித் துறைக்கு விண்ணப்பித்துள்ளன. சென்னையில் இருந்துதர நிர்ணய அதிகாரிகள் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.