

ஆவணங்களை சரிபார்க்க வந்த, விவசாயியை, கிராம உதவியாளர் தாக்கிய விவகாரம் தொடர்பாக, விஏஓ, கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையத்தில் விஏஓ அலுவலகம் உள்ளது. இங்கு விஏஓவாக கலைச்செல்வி, கிராம உதவியாளராக முத்துசாமி ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
கடந்த 6-ம் தேதி இந்த அலுவலகத்துக்கு ஆவணங்களை சரிபார்க்க வந்த, கோபிராசிபுரத்தைச் சேர்ந்த விவசாயி கோபால்சாமிக்கும், விஏஓ கலைச் செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அங்கிருந்த கிராம உதவியாளர் முத்துசாமி, விவசாயி கோபால்சாமியை தாக்கினார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், அன்னூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், சாதி பெயரை கூறி திட்டி காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கூறியதாக, கிராம உதவியாளர் முத்துசாமி அளித்த புகாரின் பேரில், விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒரு வழக்கும், விஏஓ கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
வருவாய் அலுவலர் விசாரணை
மேலும், இந்த விவகாரத்தை தொடர்ந்து விஏஓ கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி ஆகியோர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். விவசாயி கோபால்சாமியை, கிராம உதவியாளர் முத்துசாமி தாக்கும் வீடியோவும், விவசாயி கோபால்சாமி காலில், கிராம உதவியாளர் முத்துசாமி விழுந்து கதறி அழுகும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின.
இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, மேற்கண்ட விவகாரம் தொடர்பாக விஏஓ கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி ஆகியோர் இன்று (ஆக.16) பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மாவட்ட வருவாய்த்துறையினர் கூறும்போது,‘‘ விஏஓ கலைச்செல்வியை, மாவட்ட வடக்கு வருவாய் கோட்டாட்சியரும், கிராம உதவியாளர் முத்துசாமியை அன்னூர் வட்டாட்சியரும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்,’’ என்றனர்.