Last Updated : 16 Aug, 2021 06:45 PM

 

Published : 16 Aug 2021 06:45 PM
Last Updated : 16 Aug 2021 06:45 PM

3-ம் அலையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் கோவை: 1.25 லட்சம் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி

கோவை கணபதி அருகே காட்மா சங்கம், மாவட்ட தொழில் மையம் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த தொழிலாளர்கள்.

கோவை

கரோனா தொற்றின் 3-ஆம் அலையை எதிர்கொள்ளும் வகையில் தொழில்துறை மாவட்டமான கோவையில் தொழிலாளர்கள் 1.25 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள நிலையில், மீண்டும் ஒரு பின்னடைவைச் சந்திக்க இயலாது என்பதால் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் விரைவாகத் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என அரசுக்குத் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றைச் சார்ந்து 5 லட்சம் தொழிலாளர்கள் வரை உள்ளனர்.

கரோனா முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரவலின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, உற்பத்தி நிறுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதிப்புகளால் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் அதிக பாதிப்புகளைச் சந்தித்தன. இத்தகைய பாதிப்பின் தாக்கத்தால் ஏற்கெனவே தொழில்துறை 10 ஆண்டுகள் பொருளாதார ரீதியாகப் பின்னோக்கிச் சென்று விட்டதாக தொழில்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

தற்போதைய சூழலில் கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் சற்றே குறைந்து காணப்படும் நிலையில், 3-ம் கட்டப் பரவலானது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அடுத்தகட்டப் பரவல் ஏற்பட்டாலும் தொழில் நிறுவனங்களை மூடாமல் தொடர்ந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என தற்போதே தொழில் துறையினர் தரப்பில் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டங்களில் கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது.

அதற்கேற்ப மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள சுமார் 5 லட்சம் தொழிலாளர்களில் இதுவரை 1.25 லட்சம் பேருக்கு தற்போது வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பதிவுகளின்படி 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் 21 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் தற்போது வரை 62,262 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தமாக 83,262 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறும்போது, 'தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாம்களைத் தவிர்த்து, பொதுமக்களுக்கான அரசின் தடுப்பூசி முகாம்கள், தனியார் தடுப்பூசி முகாம்கள், பிற துறையினரால் நடத்தப்படும் முகாம்கள் மூலமாக சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறாக மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர்கள் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் முதற்கட்டத் தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்' என்று தெரிவித்தனர்.

கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டக் குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சி.சிவக்குமார் கூறும்போது, 'கரோனா தொற்றின் முதல் இரு அலைகளின் பரவலால் ஏற்கெனவே தொழில்துறை பொருளாதார ரீதியாகவும், உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலும் 10 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது. அடுத்து 3-ம் அலைப் பரவல் குறித்துப் பேசத் தொடங்கி விட்டனர். கோவை, திருப்பூரில் தொழில் நிறுவனங்கள் மிகவும் நெருக்க, நெருக்கமாக உள்ளன. இதனால் தொழிலாளர்கள், தொழில்முனைவோர் என அனைவரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்காக மீண்டும் தொழில் நிறுவனங்களையும் மூட முடியாது. அதற்கேற்ப நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் ' என்று தெரிவித்தார்.

மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன் கூறும்போது, 'தொழில் அமைப்புகளுடன் இணைந்து தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியை முடிந்தவரை துரிதமாக மேற்கொண்டு வருகிறோம். இன்று கூட 3 தொழில் அமைப்புகளுக்குத் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி முகாம் நடத்த தேவையான உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் தடுப்பூசி வருகையைப் பொறுத்தே அனைவருக்கும் செலுத்தும் காலத்தை முடிவு செய்ய முடியும்' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x