தன் பெயரில் உள்ள பட்டாவை பேரன்களுக்கு முறைகேடாக மாற்றியதாக புகார்: பாட்டி போராட்டம்
விருத்தாசலம் அருகே முதனை கிராமத்தில் பாட்டியின் பெயரில் உள்ள பட்டாவை, அவரது மகன் வழிப் பேரன்களின் பெயரில் முறைகேடாக மாற்றப்பட்டதைக் கண்டித்து பாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எம்.வீரட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலாவதி. 78 வயதான இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் சக்கரவர்த்தி ஆதரவில் நீலாவதி வசித்து வருகிறார்.
இந்த நிலையில், முதனை கிராமத்தில் நீலாவதி பெயரிலுள்ள 68 சென்ட் நிலத்தை, நீலாவதியின் இளைய மகன் ராஜேந்திரன் என்பவர் தனது மகன்களான சிவானந்தன், அஜித்குமார் மற்றும் வருண்குமார் ஆகிய 3 பேரின் பெயரில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதுகுறித்து பாட்டி நீலாவதி, பட்டா மாற்றத்துக்கு முதனை கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரனை அணுகியதாகவும் நீலாவதியின் போலியான விடுதலைப் பத்திரம் மூலம் பட்டா மாற்ற கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தன் பெயரில் உள்ள சொத்தை பேரன்கள் பெயரில் மாற்றிக் கொண்டதாகக் கூறி நீலாவதி, இன்று தனது உறவினர்களுடன் விருத்சாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் சென்று, ’முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் மகன் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும்’ என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீஸார் மற்றும் வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோர், நீலாவதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து, பாட்டி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
