

தடாகம் பகுதி செங்கல் சூளைகள் விதிமீறல் புகார் குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுப்படி கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இன்று (ஆக.16) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கை விசாரித்து, நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்தியகோபால் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தனர்.
அதில், "தடாகம் பகுதியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும், அங்குள்ள செயல்பாடுகளை எப்படி முறைப்படுத்தலாம் என்பதைத் தெரிவிக்கவும் குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழுவில் கோவை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், புவியியல், கனிம வளத்துறையில் தலா ஒரு மூத்த அதிகாரி ஆகியோர் இடம்பெறுவார்கள். இவர்கள் அந்தப் பகுதியை ஆய்வு செய்து அங்குள்ள நிலவரம், விதிமீறல் இருந்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்" என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், தடாகம் பகுதியில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வருவாய்துறை, கனிம வளத்துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த வழக்கில், வரும் 26-ம் தேதிக்குள், கூட்டுக் கமிட்டி தன் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.