பாதை கேட்டு பட்டியலினத்தோர் மயானத்தில் குடியேறிப் போராட்டம்: கூலித் தொழிலாளி பலி

பாதை கேட்டு பட்டியலினத்தோர் மயானத்தில் குடியேறிப் போராட்டம்: கூலித் தொழிலாளி பலி
Updated on
1 min read

கரூர் அருகே பாதை கேட்டுப் பட்டியலின மக்கள் மயானத்தில் குடியேறிய போராட்டத்தில் பங்கேற்ற கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

கரூர் மாவட்டம் நெரூர் அருகேயுள்ளது வேடிச்சிபாளையம். இங்கு பட்டியலின மக்களுக்குச் சொந்தமான மயானம் உள்ளது. அங்கு பாதையை மறித்துச் சிலர் விவசாயம் செய்து வந்ததால் மயானத்திற்குச் செல்வற்குப் பாதையின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். மயானப் பாதை கேட்டு அதிகாரிகளுக்குப் பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனைக் கண்டித்து 75-வது சுதந்திர தினமான நேற்று அப்பகுதியைச் சேர்ந்த 15 பெண்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் மயானத்தில் குடியேறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாங்கல் போலீஸார், மண்மங்கலம் வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடாமல் விடிய விடிய மயானத்திலேயே போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலுசாமி (43) இன்று காலை வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் மயானத்திற்குத் திரும்பிய நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்துத் தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், எஸ்.பி. ப.சுந்தரவடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் பாதை அமைத்துத் தருவதாக உறுதியளித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டு, கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in