

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக சுகாதாரத் துறையின், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த 5-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் உள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத் தூர் மற்றும் திருநெல்வேலி) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தால் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 1,206 பேர் பயனடைந்துள்ளனர்.