Published : 16 Aug 2021 03:21 AM
Last Updated : 16 Aug 2021 03:21 AM

தமிழக மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் வெளிப்படைத் தன்மையுடன் உழைத்து ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்

தமிழக மக்கள் பிரதிநிதிகள், அரசுஅதிகாரிகள் ஆகியோர் வெளிப்படைத் தன்மையுடன் உழைத்து, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக்கொண்டார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:

ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து நம் நாட்டுக்கு விடுதலை பெற்றுத்தர, பல்வேறு இன்னல்களை தாங்கிக்கொண்ட தியாகிகளுக்கு, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்துகிறேன்.

செழுமையான பண்பாடு, பழமையான மொழி மற்றும் நட்புபாராட்டும் மக்களின் உறைவிடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு. சிறப்பான உட்கட்டமைப்பையும், திறன்மிகு பணிச் சூழலையும் இம்மாநிலம் பெற்றுள்ளது.

மாநில அரசின் அயராத முயற்சிகள் காரணமாக, தமிழ்நாடு பல துறைகளில் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது. நீங்கள் அனைவரும் முழு வெளிப்படைத்தன்மையுடன், கடினமாக உழைக்க வேண்டும். மக்களுக்கு ஊழல் இல்லாத நிர்வாகத்தை வழங்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் மாநிலத்தை முதலிடத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் கரோனா 2-வதுஅலையை எதிர்த்துப் போராட குழுவாகப் பணியாற்றிய முதல்வரையும், முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், உள்ளாட்சி, வருவாய், காவல் உள்ளிட்ட அனைத்து துறையினரையும் வாழ்த்துகிறேன்.

கரோனா நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றுவதன் வாயிலாகவும், 100 சதவீதம் தடுப்பூசியை போட்டுக்கொள்வதன் வாயிலாகவும் தமிழக மக்கள் அரசுக்கு தங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினரின் சேவைகளுக்கு நன்றி தெரிவிக்க, ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவைத் தலைவர் எம்.அப்பாவு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, அரசு தலைமைச் செயலர் வி.இறையன்பு, ஆளு நரின் செயலர் ஆனந்தராவ் வி.பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x