Published : 16 Aug 2021 03:21 AM
Last Updated : 16 Aug 2021 03:21 AM

ஆன்மிகத் தலைவர், சமூக சேவகர் ஸ்ரீமாதா அமிர்தானந்தமயிக்கு கவுரவ டாக்டர் பட்டம்: புவனேஸ்வர் கலிங்கா இன்ஸ்டிடியூட் வழங்கியது

ஆன்மிகம், கல்வி, சுற்றுச்சூழல், அறப் பணிகள் உள்ளிட்டவற்றில் ஆன்மிகத் தலைவர், சமூக சேவகர் மாதா அமிர்தானந்தமயி தேவியின் பங்களிப்பை போற்றும் விதமாக, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி நிறுவனம் (KIIT) அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. கடந்த 14-ம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் மெய்நிகர் முறையில் இந்த பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி, திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார். KIIT வேந்தர் வேத பிரகாஷ், இணை வேந்தர் சுப்ரத் குமார் ஆச்சார்யா, துணைவேந்தர் சஸ்மிதா சமந்தா, பதிவாளர் ஞானரஞ்சன் மொகந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாதா அமிர்தானந்தமயி தனது ஏற்புரையில், ‘‘வெளி உலகை மட்டுமின்றி, நமக்குள் இருக்கும் அக உலகையும் தெரியப்படுத்துவதே உண்மையான கல்வி ஆகும். இந்த தேசம், உலகம், சக மனிதர்கள், மற்ற உயிரினங்கள், இயற்கை, கடவுள் என அனைத்துடனும் மாணவர்களுக்கு ஆழமான பந்தத்தை கல்வி உருவாக்குவது அவசியம்’’ என்றார்.

நோபல் பரிசு பெற்ற ழான் மேரி லேன், இ-நாம் செக்யூரிட்டீஸ் இணை நிறுவனர் வல்லப் பன்சாலி ஆகியோருக்கும் விழாவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

ஏற்கெனவே, கடந்த 2019-ல் மைசூரு பல்கலைக்கழகம், கடந்த 2020-ல் நியூயார்க் பல்கலைக்கழகம் ஆகியவை மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. தற்போது பெறுவது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை அமிர்தா விஷ்வ வித்யாபீடம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x