

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையால் சந்தித்த, சந்திக்கும், சந்திக்கப் போகும் துயரங்கள் அனைவரும் அறிந்தவை. கடந்த ஓராண்டாகத் தான் தூத்துக்குடி மக்கள் விஷக்காற்றை சுவாசிப்பது ஓரளவேனும் குறைந்திருக்கிறது.
‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றும் தீர்மானத்தை’ நிறைவேற்ற வேண்டும் என்றும் தாமிர உற்பத்திக்கான நெறிமுறைகளைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்றும் 2018-ம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தமிழக அரசை வலியுறுத்தினார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் உறுதியளித்தபடி, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும்.நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே இந்த உயிர்க்கொல்லி ஆலையை நிரந்தரமாக அகற்றும் சிறப்புத் தீர்மானத்தை இயற்ற வேண்டும்.
தீர்மானத்தின் நகல் உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையை அனுமதித்த அரசு அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மீதும் விசாரணை நடத்த வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவும் இப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களுக்குத் தூத்துக்குடியிலேயே நினைவகம் அமைத்திடவும் தமிழக முதல்வர் ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.