

2018 முதல் 2021 ஏப்ரல் 12-ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தவர் எம்.கே.சுரப்பா. இவரது பணிக்காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக ரூ.280 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு நவ.11-ம் தேதி நியமித்தது. பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மற்றும் புகார் அளித்தவர்கள் உள்ளிட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.
பின்னர், புகார்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு சுரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்து, ஆணையத்திடம் சுரப்பா பதில் மனு சமர்பித்தார். தொடர்ந்து, விசாரணை அறிக்கையை ஜூன் மாத இறுதியில் ஆணையம் இறுதிசெய்தது.
இதற்கிடையே, விசாரணை முடிந்து 2 மாதங்களாகியும் அறிக்கை வெளியாகாதது குறித்து, பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து உயர்கல்விதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "சுரப்பா மீதான புகார்கள், அதற்குரிய முகாந்திரங்கள், விளக்கங்கள், பரிந்துரைகள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய அறிக்கையை, கலையரசன் குழு கடந்த வாரம் சமர்ப்பித்துவிட்டது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முடிந்த பிறகு, அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.