Published : 16 Aug 2021 03:21 AM
Last Updated : 16 Aug 2021 03:21 AM

முதல்வர் உத்தரவால் சுதந்திர தினத்தன்று முதன்முறையாக சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளுக்கு கவுரவம்: பாரதியார், பாரதிதாசன் சிலைகள், அலட்சியத்தால் தவிர்ப்பு

சென்னை துறைமுகம் அருகே உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்முறையாக மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. (அடுத்த படங்கள்) மாலை அணிவிக்கப்படாமல் இருக்கும் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் சிலைகள்.படங்கள்: ச.கார்த்திகேயன்

சென்னை

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவால் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு முதன்முறையாக தமிழகம் முழுவதும் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து கவுரவிக்கப்பட்டது. அதே நேரத்தில் சென்னையில் அதிகாரிகள் அலட்சியத்தால் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கவில்லை.

தமிழக அரசு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. ஆனால் சுதந்திர தினத்தன்று அதற்காக போராடிய வீரர்கள் மற்றும் தலைவர்களின் சிலைகள் இதுவரை கேட்பாரற்றே கிடந்தன.

இந்நிலையில் ‘சுதந்திரம் மற்றும் குடியரசு தினங்களில் கேட்பாரற்று கிடக்கும் தலைவர்களின் சிலைகள்: அலங்கரித்து மரியாதை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்ற தலைப்பில், `இந்து தமிழ் திசை' நாளிதழில் கடந்த 13-ம் தேதி செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து, “சுதந்திர தின விழா, குடியரசு தின விழாவின்போது சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில், நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் சிலைகளுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு முதன்முறையாக நேற்று சென்னையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், மெரினாவில் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், எழும்பூரில் உள்ள மாவீரன் அழகு முத்துக்கோன் உள்ளிட்டோரின் சிலைகளுக்கு மாநகராட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மக்கள் மகிழ்ச்சி

அதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இது சுதந்திர போராட்ட வீரர்கள் மீது பற்றுகொண்ட மக்களுக்கு பெருமகிழ்ச்சியை தந்தது.

அதே நேரத்தில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் சிலைகள் தூய்மைப்படுத்தப்படாமல், பறவைகளின் எச்சங்களுடன் காட்சியளித்தன. இது தொடர்பாக செய்தித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “முதல்வர் உத்தரவைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அவகாசம் குறைவாக இருந்ததால் சில குறைபாடுகள் இருந்திருக்கலாம். அடுத்து வரும் குடியரசு தினத்தன்று எந்த சிலையும் விடுபடாமல் சிறப்பாக மரியாதை செய்யப்படும்” என்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘`அனைத்து சிலைகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது'’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x