

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டையை சேர்ந்தவர்கள் நித்யானந்தம்(32), தேவிகா(30) தம்பதியினர். பட்டப்படிப்புகளை முடித்த இவர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் பணி வாய்ப்புக்காக காத்திருந்தனர்.
இவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, திருவாலங்காடு அருகே கோபாலகிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியரான பி.வெங்கடேசன்(52), திருத்தணியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தற்காலிக துணை முதல்வரான டி.வி.வெங்கடேசன், சிறுகும்மி அரசினர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான அருள் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
அப்போது அவர்கள், தங்களுக்கு பள்ளிக்கல்வித் துறையில்உள்ள பல உயர் அதிகாரிகளை தெரியும். அவர்கள் மூலம் நித்யானந்தம், தேவிகா இருவருக்கும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி பணம் கேட்டுள்ளனர்.
இதை நம்பிய கணவன், மனைவிஇருவரும் 12 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளனர். அதனை பெற்ற பி.வெங்கடேசன் தரப்பினர், போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தேவிகா, திருவள்ளூர் எஸ்பி வருண்குமாரிடம் அளித்த புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அவ்விசாரணையின் அடிப்படையில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பி.வெங்கடேசனை நேற்று முன்தினம் இரவு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள டி.வி.வெங்கடேசன், அருள் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.