

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் நேற்று பாஜக கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடியை காவல் துறையினர் இறக்கியதால் பாஜக வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம் நகரில் சுதந்திர தினத்தையொட்டி, பாஜக நிர்வாகிகள் நேற்று பாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியேற்றினர். இதையறிந்த காவல் துறையினர் அந்த கொடிக் கம்பத்தில் இருந்து தேசியக் கொடியை கீழே இறக்கினர்.
இதையடுத்து, பாஜக மாவட்டத் தலைவர் அய்யப்பன் தலைமையில் அக்கட்சியினர் ஜெயங்கொண்டம் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு, கொடி இறக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கட்சிக் கொடிக்கம் பத்தில் தேசியக்கொடி ஏற்றியது தவறு என காவல் துறையினர் தெரிவித்தனர். அதற்கு, ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு உள்ள காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதை ஏன் அவிழ்க்கவில்லை என முறை யிட்டனர்.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடியும் இறக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, பாஜகவினர் கலைந்து சென்றனர்.