

கரோனா தொற்று காலத்தில் முன்களப் பணியாளராக சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்புதுறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்துறை, ஊராட்சித்துறை உள்ளிட் துறைகளைச் சேர்ந்த மொத்தம் 33 பேர் தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சென்னையில் இன்று நடைபெற்ற சுதந்திரதின நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பதக்கம், சான்றை வழங்கினார்.
அதில் ஒருவராக கோவை கள்ளப்பாளையம் ஊராட்சியில் தூய்மைப்பணியாளராக பணியாற்றி வரும் ஆர்.ஜெகநாதன் சிறப்பு பதக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றார். கோவை மாவட்டத்தில் இவர் ஒருவருக்கு மட்டுமே இந்த சிறப்பு பதக்கம் கிடைத்துள்ளது.
மாநிலம் முழுவதும் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருபவர்களில்ஜெகநாதன் மட்டுமே இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக விருது பெற்ற ஜெகநாதன் கூறும்போது, “கரோனா காலத்தில் வீடு ,வீடாக சென்று கிருமிநாசினி தெளிப்பது, கரோனா தொற்று பாதித்து தனிமைப்படுத்திக்கொண்டவர்களின் வீடுகளுக்கு உணவு கொண்டுபோய் சேர்ப்பது, அவர்களுக்கு தேவையான மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்கிக்கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டேன்.
கரோனா தொற்றுபரவல் தொடங்கியது முதல் இந்தபணிகளை மேற்கொண்டு வருகிறேன். நேரம், காலம் பாராமல் பணியாற்றியதைப் பாராட்டி முதல்வர் கையால் இந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.