

நீலகிரி மாவட்டத்தில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழா எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது.
உதகையில் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தேசிய நெடுஞ்சாலை துறை, பத்திரிகையாளர்கள் உட்பட 19 துறைகளை சேர்ந்தோருக்கு பாராட்டு கேடயங்களும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், 29 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 8 ஆயிரத்து 955 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து தோடர் மற்றும் கோத்தர் பழங்குடியினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்