கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: வீட்டுக்கே சென்று வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கி கவுரவித்தார். உடன் அமைச்சர்கள், டி.ஆர்.பாலு எம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்.
தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கி கவுரவித்தார். உடன் அமைச்சர்கள், டி.ஆர்.பாலு எம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை, அவரது வீட்டுக்கே நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்துக்கும், தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் விருதை உருவாக்கி, வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

என்.சங்கரய்யா தேர்வு

இதையடுத்து, இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்' விருதுக்கு பொது வாழ்க்கையில் அரும்பணியாற்றியதுடன், தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார்.

வயது மூப்பு காரணமாக வீட்டில் இருக்கும் அவரை, சுதந்திர தினத்தன்று வரவழைக்க வேண்டாம் என்றும், நேரில் வீட்டுக்கே சென்று வழங்குவதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார். அதன்படி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள என்.சங்கரய்யாவின் வீட்டுக்கு நேற்று சென்ற முதல்வர் ஸ்டாலின், அவருக்கு `தகைசால் தமிழர்’ விருதை வழங்கி, கவுரவித்தார். விருதுடன், ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

ரூ.10 லட்சம் கரோனா நிதி

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி தனக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தை, கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு முதல்வரிடம் சங்கரய்யா வழங்கினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., எம்எல்ஏ இ.கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், ஏ.சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in