

தமிழகத்தில் அக்னி வெயிலுக்கு முன்பு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணை யம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துவருகி றது. தலைமைத் தேர்தல் ஆணை யர் நசிம் ஜைதி மற்றும் ஆணை யர்கள் தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்குச் சென்று, ஏற்பாடுகளை பார்வை யிட்டனர். அங்குள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினர்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடிக்க வேண் டும் என பெரும்பாலான அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டன. இது பற்றி தேர்தல் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கும்போது கவனத்தில் கொள்வோம் என நசிம் ஜைதி தெரிவித்தார். இந்நிலையில், மார்ச் முதல் வாரத்தில் 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மார்ச் 2 அல்லது 3-ம் தேதி இது பற்றிய அறிவிப்பு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கம், அசாம் மாநிலங் களில் 4 அல்லது 5 கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்த வேண்டி யுள்ளது. இதன்படி, ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கினாலும், இந்த மாநிலங்களில் தேர்தலை நடத்தி முடிக்க ஏப்ரல் இறுதி வரையாகிவிடும்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்க ளுக்கான தேர்வுகளும் ஏப்ரல் இறுதியில்தான் முடிகிறது. இதை யடுத்து, மே 3-ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பம் கடுமையாக இருக்கும். எனவே, அக்னி வெயிலுக்கு முன்பாக, அதாவது ஏப்ரல் 20-ல் இருந்து மே 5-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.