

ஹெராயின், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை, திருவள்ளூர் மற்றும் கேரளாவில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை பொருள், ஏ.கே 47 துப்பாக்கி மற்றும் குண்டுகளுடன் கடந்த மார்ச் மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ) பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக சென்னை, திருவள்ளூர், கேரளா உள்ளிட்ட 7 இடங்களில் நேற்று காலை என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை வளசரவாக்கம் முரளி கிருஷ்ணா நகரில் தாஜ் டவர் என்ற பெயரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஒரு வீட்டில் சற்குணம் என்ற இலங்கை தமிழர் தங்கியிருக்கிறார். அவரது வீட்டில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சோதனையில், விடுதலை புலிகள் தொடர்பான புத்தகங்கள், செல்போன், சிம் கார்டுகள் சிக்கியதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சற்குணம் மீது போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தியதாக கேரளா மாநிலம் கொச்சியில் ஏற்கெனவே வழக்கு உள்ளது. என்.ஐ.ஏ ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தலைமையில் 5 பேர் மற்றும் வளசரவாக்கம் எஸ்.ஐ. மணிமேகலை உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டது.