Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM

இன்று நாட்டின் 75-வது சுதந்திர தினம்- முதல்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார்: முகக்கவசம் அணிந்து வர அனைவருக்கும் அறிவுறுத்தல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 15) காலை தேசியக் கொடியேற்றி வைத்து, உரையாற்றுகிறார்.

இந்தியாவின் 75- வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகசட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், தலைநகர் சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு முதல்முறையாக தேசியக் கொடியேற்றிவைத்து, சுதந்திர தின உரையாற்றுகிறார்.

முன்னதாக, அவர் காலை 8.50 மணியளவில் புனித ஜார்ஜ்கோட்டை முன் வந்ததும், தலைமைச் செயலர் வெ.இறையன்பு வரவேற்கிறார். தொடர்ந்து, முப்படை தளபதிகள், தமிழக டிஜிபிமற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோரை, முதல்வருக்கு தலைமைச் செயலர் அறிமுகம் செய்துவைப்பார்.

அதன்பின், கோட்டை கொத்தளம் முன் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ஏறி, அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொள்கிறார். காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றி வைத்து, உரையாற்றுகிறார்.

தொடர்ந்து, அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வர் நல் ஆளுமை விருது, சிறந்த சேவைக்கான இளைஞர், இளம் பெண்களுக்கான விருது, மருத்துவருக்கான விருது, மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்ட அமைப்பு, கூட்டுறவு சங்கங்களுக்கான விருதுகளை அவர் வழங்குவார். இதுதவிர,கரோனா முன்களப் பணியாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்படும் என்று தெரிகிறது.

வழக்கமாக, தியாகிகள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் சுதந்திர தின நிகழ்ச்சியைக்காண அனுமதிக்கப்படுவார்கள். ஆனால்,தற்போது கரோனா காரணமாகஅனுமதியில்லை. வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்குமாறு அரசு அறிவித்துள்ளது.

மேலும், சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்து பங்கேற்கின்றனர். நிகழ்ச்சிக்கு வருவோரும் முகக்கவசம் அணிந்துவர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுதந்திர தின நிகழ்ச்சி முடியும்வரை காமராஜர் சாலையில் இன்றுபோக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக சுதந்திர தின விழாவில் ஸ்டாலின் பங்கேற்பதால், அவரது உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

முதியோர் ஓய்வூதிய உயர்வு,சுதந்திரப் போராட்டத் தியாகிகள்மற்றும் அவரது குடும்பத்தினருக்கான ஓய்வூதியத் தொகை உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று தெரிகிறது.

நினைவுத்தூண் திறப்பு

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில், சென்னை நேப்பியர் பாலம் அருகில், சுவாமி சிவானந்தா சாலை, காமராஜர் சாலை சந்திப்பில் தமிழக அரசால் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையினர் ரூ.1.94 கோடி மதிப்பில் இதை அமைத்துள்ளனர். சுதந்திர தினக் கொடியேற்று விழா முடிந்து திரும்பும்போது, இந்த நினைவுத்தூணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x