

அரசு ஊழியர்கள் ஏற்கெனவே அதிமுகவுக்கு எதிராக திரண்டுள்ள நிலையில் மீன்பிடிச் சட்டத்திலே திருத்தம் கொண்டுவந்து மீனவர்கள் எதிர்ப்பையும் அதிமுக சம்பாதித்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
இதனால் ஆழ்கடலுக்கும், நெருப்புக்கும் இடையே அதிமுக ஆட்சி மாட்டிக் கொண்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜெயலலிதா அரசு ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் அடுக்கடுக்கான அநியாய நடவடிக்கைகளினால் கொடுமைப் படுத்தியது போதாது என்றும், சட்டப் பேரவை நடைபெற்ற கடைசி நாளிலே கூட மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மீன்பிடிச் சட்டத்திலே திருத்தம் கொண்டு வந்திருப்பதாக, மீனவர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்.
தமிழகத்தில், "கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் - 1983" தற்போது நடைமுறையில் உள்ளது. இதில் காலத்திற்கேற்ப திருத்தம் செய்ய, 2015-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் மீனவப் பிரதிநிதிகளோடு தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.
அப்போது மீனவப் பிரதிநிதிகள் பல யோசனைகளை முன்வைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், விதிமுறைகளை இறுதி செய்யும் முன் மீனவர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.
ஆனால் தற்போது மீனவர்களுடன் ஆலோசிக்காமலேயே, அவசர அவசரமாக பிப்ரவரி 20-ம் தேதி, 14வது சட்டப் பேரவையில் இறுதி நாளில், மீன்பிடி ஒழுங்கு முறைச் சட்டத்தில் திருத்தம் செய்து அதற்கு அவையின் ஒப்புதலையும் பெற்றுள்ளார்கள்.
ஆனால் "திருத்தங்களில் உள்ள விதிமுறைகள் கடுமையாக உள்ளன; தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்" எனத் தெரிவித்துள்ள மீனவ அமைப்புகள், போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு வருகின்றன.
வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் என்னென்ன என்று பார்த்தால், 18 வயதுக்குக் குறைவானவர்களை, மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது; விதிமுறைகளை மீறி செயல்பட்டால், ஆயுள் காலத்திற்கும் படகுகளின் உரிமம் ரத்து; அரசு சலுகைகளும் ரத்தாகும்; மீனவர்கள் தங்களது படகுகளின் நீளத்தை அதிகரிப்பதோடு, படகின் வடிவமைப்புக்கு ஏற்ற குதிரைத்திறனில், எஞ்சின் பொருத்த வேண்டும்; மீன்பிடி விசைப்படகுகள், ஐந்து கடல் மைல்களுக்கு அப்பாலும், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் 12 கடல் மைல்களுக்கு அப்பாலும் சென்று மீன் பிடிக்க வேண்டும்; வலை தயாரிப்பாளர் மற்றும் வியாபாரிகள், கடல் மீன் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். மீன் வளத் துறை, தொழில் மற்றும் வணிகத் துறையில் தடையில்லா சான்று பெற வேண்டும்; படகுகள் கடலில் இயக்க ஏற்றது என படகு நிறுவனம் பரிந்துரைக்க வேண்டும் என்பனவாகும்.
தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர், அன்பழகன் கூறும்போது, “மீனவர்களுடன் ஆலோசிக்காமல் கடும் விதிமுறைகளுடன் அரசு அவசர கதியில் சட்டத்தைத் திருத்தம் செய்துள்ளது. இதனால், மீனவர்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்படும். தேர்தல் காலம் என்பதால், போராட இதற்குச் சரியான காரணம் அல்ல. புதிய அரசிடம், கோரிக்கை வைத்துத் தீர்வு காண்போம். அதற்கு, இப்போதே மீனவர்கள் அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
இந்திய மீனவர் சங்கத் தலைவர் எம்.டி. தயாளன் இதுபற்றிக் கூறும் போது, "மீனவர் நலன் காக்கும் வகையில் அரசு செயல்படவில்லை. ஆயுள் கால உரிமம் ரத்து, அரசின் சலுகைகள் ரத்து என கடுமையான விதிகள் உள்ளன. இதை ஏற்க முடியாது. போராட்டத்தில் குதிப்போம்” என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
இலங்கை அரசின் கடற்படையினரால் தொடர்ந்து பல வகையிலும் இன்னலுக்கு ஆளாகும் மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து, மீனவர்களை அரவணைக்க வேண்டிய தமிழக அரசே, புதிய மசோதா மூலம் அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து தண்டனையை நிறைவேற்றிட வழிவகை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விடுத்து, பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியிருக்கும் இந்தச் செயல் மீனவர்களுக்கு எதிரானது; வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதைப் போன்றது; மீனவர்களைத் தொடர்ந்து கண்ணீரில் மிதக்க வைத்திடக் கூடியது.
மீனவர்கள் மாத்திரமல்ல; அரசு ஊழியர்கள் வேறு வழியில்லாமல் பணிக்குத் திரும்பிய நிலையில், வணிக வரி ஊழியர்களின் வேலை நிறுத்தம் கடந்த 20 நாட்களாக நடைபெற்று, இவர்களின் வேலை நிறுத்தத்தால், மாநிலம் முழுவதும் உள்ள, 560 வணிக வரி அலுவலகங்களும் முடங்கி, 4,000 கோடி ரூபாய் வரி வசூல் பாதிப்புக்குள்ளானது. வணிக வரி சங்கக் கூட்டமைப்பின் செயலர், திரு. ஆர். ராசேந்திரன், "சட்டசபையில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வகையிலான அறிவிப்பு எதுவும் இல்லை. எனவே போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிறோம்" என்று கூறியிருக்கிறார்.
பள்ளிக் கல்வித் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள சென்னை டி.பி.ஐ. வளாகத்தில், கல்வித் துறை சார்ந்த ஊழியர் சங்கங்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றக் கோரி, பள்ளிக் கல்வி துப்புரவுப் பணியாளர்கள் 5ஆம் நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அடிப்படை ஊதிய முரண்பாட்டைச் சரி செய்யக் கோரி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கத்தினர் நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல, ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலையில்லா பட்டதாரி கணினி ஆசிரியர் சங்கத்தினர், முற்றுகை போராட்டம் துவக்கியுள்ளனர். பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான “ஜாக்டோ” சார்பில் போராட்டம் நடத்தப் போவதாகச் செய்திகள் வருகின்றன.
இதற்கிடையே சென்னை, தலைமைச் செயலகத்திலே பணி புரியும் உதவிப் பிரிவு அலுவலர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக் கோரி காத்திருப்புப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அனுசரணை யில்லாத அணுகுமுறையினாலும், அலட்சியத்தாலும் அரசு அலுவலர்களின் போராட்டமும், மன வேதனையும் ஒரு புறம் என்றால்; சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்ததைப் போல, அ.தி.மு.க. ஆட்சியினர் மீனவர் சட்டத்தில் திருத்தம் என்ற பெயரில் மீனவர்களைப் போராட்டத்தில் குதித்திடத் தூண்டும் எதிர்மறை நிலையினை ஏற்படுத்தியிருப்பது மறுபுறம்; ஆட்சிக் காலம் முடிவுக்கு வரும்போது, குமுறும் ஆழ்கடலுக்கும், கொழுந்து விட்டெரியும் நெருப்புக்கும் இடையே மாட்டிக் கொண்டு விட்டது அ.தி.மு.க. ஆட்சி!"
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.