

அழகப்பா பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தர் பரிந்துரை பட்டியலை ஆளுநர் ஏற்காதது ஏன்? என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல் கலைக்கழக புதிய துணைவேந் தரை தேர்வு செய்யும் தேடல் குழு, சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சத்தியநாராயணா தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழு 162 விண்ணப்பங்களை பரிசீலித்து 3 பேர் கொண்ட பட்டியலை ஆக.11-ல் ஆளுநரிடம் சமர்ப்பித்தது. ஆனால், அந்தப் பட்டியலை ஏற்காத ஆளுநர், புதிய தேடல் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கீழசிவல்பட்டியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியதாவது: தமிழக ஆளுநர், பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் நியமனத்தில் எப் போதும் வில்லங்கமாகவே செயல்படுகிறார். இதற்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேராத ஒருவரை துணைவேந்தராக நியமித்தார்.
தற்போது அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தருக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்களை ஏற்காதது வியப்பாக உள்ளது. ஆளுநர் மத்திய பாஜகவின் ஏஜென்டாக உள்ளார்.
மத்திய அரசு எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி விட்டது. ஆனால் குறைக்கப்பட்ட எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை மாநில அரசு ரூ.3 கோடியாக உயர்த்தியுள்ளது. இதற்காக முதல்வர், நிதியமைச் சரை பாராட்டுகிறேன்.
பாஜகவினர் எந்த யாத்திரை வேண்டுமானாலும் போகட்டும். தமிழகத்தில் என்றுமே தாமரை மலராது. இவ்வாறு அவர் கூறி னார்.